தனித்துவத்தைப் பேணியே தமிழரசுக் கட்சி செயற்படும்.. கட்சியின் பொதுச்செயலாளர் விளக்கம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது தனித்துவத்தை முழுமையாகப் பேணி, தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செயற்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பொது நூலகக் கட்டடத் திறப்பு விழாவில் அவர் ஆற்றிய உரை குறித்துச் சமூக வலைத்தளங்களில் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து, அவர் வெளியிட்டுள்ள விளக்கத்திலேயே இவ்விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆயுதக் கலாசாரப் பின்னணியிலிருந்து (ஜே.வி.பி. அரசியல்) வந்தவராவார். அதேபோன்று எமது தமிழ் மக்களும் தமது விடிவுக்காக ஆயுதமேந்திப் போராடியவர்களாவர்.
தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள்
ஆகையினால், நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி கூறிய கருத்தை நாமும் ஏற்றுக்கொள்வது நல்லதொரு விடயமாகும். ஆனால், அவ்வாறானதொரு யுத்த சூழ்நிலை நாட்டில் மீண்டும் உருவாகாமல் இருக்க வேண்டுமாயின், தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் அர்த்தமுள்ள விதத்தில் விரைவாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை எனது உரையின் மூலம் நான் ஜனாதிபதியிடம் திட்டவட்டமாக வலியுறுத்தினேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சி இயங்கி வருகிகின்றது என சுட்டிக்காட்டிய அவர், கட்சியின் தற்போதைய இராஜதந்திர நிலைப்பாடு குறித்துப் பின்வருமாறு விளக்கினார்.
"மறுபுறம் சில எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராகப் பொதுவான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றன. ஆனால், நாங்கள் அந்தப் பின்னணியில் அவர்களுடன் இணைந்து கூட்டுச் சேர்ந்து இயங்கவில்லை.
மாறாக, நாம் எமது தனித்துவத்தைப் பேணியவாறு, எமது மக்களின் நலனை மட்டுமே முதன்மைப்படுத்தி, அரசு செய்யக்கூடிய சிறந்த விடயங்களுக்கு அந்தந்த விடயங்களின் அடிப்படையில் ஒத்துழைக்கின்றோம்.
அதேபோன்று, அரசு செய்யாமல் தவிர்க்கின்ற மற்றும் தவறாகச் செய்கின்ற விடயங்களைச் சுட்டிக்காட்ட நாம் ஒருபோதும் தவறுவதே இல்லை. இதையே நான் ஜனாதிபதியிடமும் நேரடியாகக் கூறியிருந்தேன்.
நாங்கள் நாடாளுமன்றத்தில் தனித்துச் சுதந்திரமாகவே இயங்குகின்றோம். எனினும் குறிப்பிட்ட சில மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் அரசுக்கு எதிராகப் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்படும் பட்சத்தில், ஏனைய கட்சிகளுடன் இணைந்து தற்காலிகமாகச் செயற்படத் தயாராக இருப்போம்." என்றும் சுமந்திரன் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.