திருகோணமலையில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை - போதைப்பொருள் வர்த்தகர் கைது..!
திருகோணமலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில், ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்று(15.08.2026) முன்னெடுக்கப்பட்டது.
போதைபொருளுடன் வர்த்தகர் கைது
உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை, புளியங்குளம், தேவநகர், மடுமை வீதியிலுள்ள வீடொன்றிலேயே இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 11 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு வாள், இரும்புப் குழாயில் இரும்புப் பல்சக்கரத்தைப் பொருத்தி தயாரிக்கப்பட்ட அபாயகரமான கூர்மையான ஆயுதம் என்பன கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், தேவநகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாதாள உலகக் குழு தலைவர்
இவர் அப்பகுதியை மையமாகக் கொண்டு “குட்டிப்புலி” மற்றும் “விஜய் டீம்” எனும் பெயர்களில் இரு பாதாள உலகக் குழுக்களை உருவாக்கி, அவற்றின் தலைவராகச் செயற்பட்டு வந்துள்ளார்.
அத்துடன், அப்பகுதி மக்களை அச்சுறுத்தி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட சான்றுகளும் மேல் விசாரணைகளுக்காகவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகவும் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.