ஐசிசி தேடும் குற்றவாளி: தப்பியோடிய நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்ய அதிரடி உத்தரவு!
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) தேடப்பட்டு வரும் பிலிப்பைன்ஸ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொனால்ட் "பாட்டோ" டெலா ரோசாவை உடனடியாகக் கைது செய்யுமாறு அந்நாட்டு நீதி அமைச்சு பாதுகாப்புப் படையினருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ துதெர்தேவின் 2016-2022 ஆட்சிக் காலத்தில், பிலிப்பைன்ஸ் காவல் துறைத் தலைவராக இருந்தவர் ரொனால்ட் டெலா ரோசா.
மீண்டும் அதிரகரித்துள்ள ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம்..! ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் அதிரடி உத்தரவு
கைது நடவடிக்கை
அந்த காலகட்டத்தில் பிலிப்பைன்ஸில் நடத்தப்பட்ட மிகக் கொடூரமான 'போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை'யின் முக்கிய சூத்திரதாரியாக இவர் கருதப்படுகிறார்.
இந்த ஒழிப்பு நடவடிக்கையின் போது 12,000 முதல் 30,000 வரையிலான பொதுமக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகள் சட்டவிரோதமாகச் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மதிப்பிட்டுள்ளது.
மனிதநேயத்திற்கு எதிரான இந்தக் குற்றங்களுக்காக இவரைக் கைது செய்ய ஐசிசி பிடியாணை பிறப்பித்துள்ளது.

இவரது கைது நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பிலிப்பைன்ஸ் உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடியாக நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் சட்டத்துறை செயலாளர் பிரெடெரிக் விடா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டோ சட்டத்தின் பார்வையில் தப்பியோடிய ஒரு குற்றவாளி. நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே அவரை நாங்கள் தீவிரமாகத் தேடி வருகிறோம்.
அவருக்கு அடைக்கலம் தருபவர்கள் அல்லது அவர் தப்பிச்செல்ல உதவுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று எச்சரித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு
கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்த டெலா ரோசா, கடந்த வாரம் திடீரென பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து தஞ்சம் புகுந்தார்.
ஆனால், கடந்த மே 14 அன்று நாடாளுமன்றப் பகுதியில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் அவர் அங்கிருந்து இரகசியமாகத் தப்பியோடினார்.

அவர் தற்போதும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் தான் இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த போதைப்பொருள் ஒழிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியான முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ துதெர்தே, ஏற்கனவே 2025 மார்ச் முதல் தி ஹேகில் உள்ள ஐசிசியின் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதி அமைச்சகத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, காவல் துறை அதிகாரிகள் சட்டத்திற்குட்பட்டு நடுநிலையான முறையில் தங்களின் கடமையைச் செய்வோம் என்று பிலிப்பைன்ஸ் தேசிய காவல் துறைத் தலைவர் ஜோஸ் மெலென்சியோ நார்டாடெஸ் தெரிவித்துள்ளார்.