ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு
ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக சமரி அத்தபத்து தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் அணியை இலங்கை கிரிக்கெட் சபை இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
8ஆவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலாவது போட்டியில் தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.
இப்போட்டி கேப் டவுன் நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணி வீரர்கள்
ஐசிசி இருபது 20 மகளிர் உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி வீரர்கள் முறையே சமரி அத்தபத்து (தலைவி), ஓஷதி ரணசிங்க, ஹர்சிதா சமரவிக்ரம, விஷ்மி குணரட்ன, மல்ஷா செஹானி, நிலக்ஷி டி சில்வா, கவிஷா டில்ஹாரி, அமா காஞ்சனா, அச்சினி குலசூரிய, இனோக்கா ரணவீர, சுகந்திகா குமாரி, தாரிகா செவ்வந்தி, அனுஷ்கா சஞ்சீவனி, கௌஷினி நுத்யங்கனா, சத்யா சந்தீபனி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
உலகக் கிண்ணப்போட்டியில் பங்கேற்கும் அணியில், 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண மகளிர் அணித் தலைவி விஷ்மி குணரட்ன தெரிவாகியுள்ளார்.
அத்துடன் இலங்கை மகளிர் அணியில் சமரி அத்தபத்து, இனோக்கா ரணவீர, ஓஷாதி ரணசிங்க போன்ற அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட வீராங்கனைகளும் ஹர்ஷிதா சமரவிக்ரம, சுகந்திகா குமாரி, நிலக்ஷி டி சில்வா அமா காஞ்சனா ஆகி ஓரளவு அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கவிஷா டில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, கௌஷினி நுத்யங்கன, மல்ஷா ஷெஹானி, அச்சினி குலசூரிய, தாரிகா செவ்வந்தி ஆகியோரும் இலங்கை மகளிர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கவில்லை
ஐசிசியின் சிறப்பு உலக அணியில் பெயரிடப்பட்டுள்ள தெவ்மி விஹங்கா சிரேஷ்ட அணியில் இடம்பெறவில்லை, அத்துடன் வேகப்பந்துவீச்சாளரும் அனுபவசாலியுமான 27 வயதுடைய ஹசினி பெரேரா உபாதைக்குள்ளானதால் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கவில்லை.
ஹசினி பெரேரா பதிலாக ஒரே ஒரு சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் மாத்திரம் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் சந்த்யா சந்தீப்பனி இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.