எல்லையை தாண்டாத இந்திய அணியின் முடிவை பாகிஸ்தானுக்கு அறிவித்த ஐசிசி
தமது நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் 2025 செம்பியன்ஸ்சிப் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பதற்காக, இந்திய (India) அணி எல்லையை தாண்டாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கூறியுள்ளதாக, பாகிஸ்தான் (Pakistan) கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் செம்பியன்ஸ் கிண்ணம் 2025 க்கு தங்கள் அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று இந்திய கிரிக்கட் கட்டு;ப்பாட்டு சபை அறிவித்துள்ளமை குறித்து, சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்திடம் இருந்து, பாகிஸ்தான் கிரிக்கட் சபைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் பதற்றங்கள்
இதனையடுத்து குறித்த மின்னஞ்சலை, ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ளதாக பாகிஸ்தானிய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்திய அணிக்கான போட்டிகளை மாத்திரம், கலப்பு முறையில் வேறு நாடுகளில் நடத்துவது குறித்த எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்று பாகிஸ்தானிய கிரிக்கட் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்த செம்பியன்சிப் கிண்ணப் போட்டிகள், இன்னும் நூறு நாட்களில் அதாவது 2025 பெப்ரவரி 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
இதன்படி, பாகிஸ்தான் 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, இந்த போட்டிகளை நடத்தவுள்ளது.
இதற்கிடையில் தற்போதைய அரசியல் பதற்றங்கள் காரணமாக, இந்தியா பாகிஸ்தானில் 16 ஆண்டுகளாக விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.