முதல் போட்டியை வெற்றியுடன் ஆரம்பித்த நியூசிலாந்து
இந்தியாவின், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று ஆரம்பமான முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று முதல் ஆரம்பமாகிறது. நவம்பர் 19ஆம் திகதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் அரங்கேறும் இந்த தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை,பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.
2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்முறையாக உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெறவில்லை.
7 வெற்றி தேவை
இந்த தொடரில் களமாடும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதாவது ரவுண்ட் ராபின் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 9 லீக்கில் விளையாடவேண்டும்.
இதன் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதி சுற்றை எட்டுவதற்கு 7 வெற்றி தேவை.
பல ஆட்டங்கள் மழையால் பாதிக்க வாய்ப்பு இருப்பதால் குறைந்தது 6 வெற்றியாவது பெற வேண்டும்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
முதலில் துடுப்படுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
நியூசிலாந்து பதிலடி
இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் வெற்றியிலக்கண 283 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 36.1 ஓவர்களில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து ஆபர வெற்றியை பதிவு செய்தது.
நியூசிலாந்து அணி சார்பில் டேவன் காணவே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சதம் கடந்து அணியினை வெற்றிப்பாதைக்கு ஈட்டிச்சென்றுள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் கடந்த 2019 உலககோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியுடன் சந்தித்த தோல்விக்கு நியூசிலாந்து பதிலடி கொடுத்துள்ளதாக கிரிக்கட் ரசிகர்கள் தமது கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்
இங்கிலாந்து
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் குர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்
நியூசிலாந்து
டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, டிரென்ட் போல்ட்.
இந்நிலையில் நாளைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.