நீதி இல்லாத இலங்கைக்கு நிதி எதற்கு..! ஜெனிவா அமர்வில் கஜேந்திரகுமார் கேள்வி
உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு நாட்டுக்கு நிதியளிப்பது நிறுவன மயமப்பட்ட அநீதியை நிலைநாட்டுவதாகவே அமையும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது அமர்வில் விடயம் 8 இன் பொது விவாதத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், "வியன்ன பிரகடனமும் அதன் செயல்முறைகளும் தொடர்பாக 27ஆவது பத்தி கூறுகின்றது, "நீதி நிர்வாகத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு முறையாக நிதியளிக்கப்பட வேண்டும், மேலும் சர்வதேச சமூகத்தால் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளின் அதிகரித்த அளவு வழங்கப்பட வேண்டும்."
எவ்வாறாயினும், கடந்த வாரம் இலங்கையில் தமிழ் நீதிபதி ரி. சரவணராஜா, "எனது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக எனது அனைத்து உத்தியோகபூர்வ பதவிகளையும் பணிகளையும் இராஜிநாமா செய்கின்றேன்" என்று கூறிவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
வெளிப்படையான மிரட்டல்
சிங்களப் பெரும்பான்மையினருக்குள் உள்ள பௌத்த தீவிர போக்குக் கொண்ட மதவாத, இனவாத சக்திகளை எரிச்சலூட்டுவதாகக் கூறி அவர் பிறப்பித்த உத்தரவை மாற்றுமாறு நாட்டின் சட்டமா அதிபரால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அழுத்தமும் இதில் அடங்கும்.
போர்க்குற்றவாளி எனச் சந்தேகிக்கப்படும் இலங்கை அரச எம்.பி. (சரத் வீரசேகர) ஒருவர், உயரிய சபையில் அடிக்கடி இலங்கை சிங்கள பௌத்த நாடு என்றும், தமிழ் நீதிபதி தனது இடத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் எச்சரித்து, நாடாளுமன்றத்தில் மேற்படி நீதிபதியை வெளிப்படையாகவே மிரட்டினார்.
அதே நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய பாதுகாப்புத் துறை தொடர்பான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தற்போதைய தலைவராகவும் உள்ளார்.
நிறுவன மயமப்பட்ட அநீதி
நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட எனது சக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அரச ஆதரவு குண்டர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார்.
இது நடைபெற்றபோது பொலிஸார் அங்கு பார்த்துக் கொண்டிருந்தனர். பொலிஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், பின்னர் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, இறுதியில் 6 பேரைக் கைது செய்து, அடுத்தடுத்த நாட்களில் நீதிமன்றத்துக்குச் சென்று "இனக் கலவரங்களை" தடுப்பதற்கு சந்தேகநபர்களைப் பிணையில் விடுவிக்க வேண்டும் என்று காரணம் காட்டி விடுவித்திருந்தனர்.
சரியான சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல், உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு நாட்டுக்கு நிதியளிப்பது நிறுவன மயமப்பட்ட அநீதியை நிலைநாட்டுவதாகவே அமையும்." என தெரிவித்துள்ளார்.

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam
