அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்து பதவி விலகேன்: கியூபா ஜனாதிபதி அதிரடி
அமெரிக்காவின் கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் தான் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என கியூபா ஜனாதிபதி மிக்வேல் டயஸ்-கெனெல் (Miguel Diaz-Canel) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடகமான NBC நியூஸிற்கு அளித்த நேர்காணலில், "பதவி விலகல் என்பது எங்கள் அகராதியிலேயே இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.
கியூபாவில் ஆட்சி மாற்றம்
கியூபா ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்றும், அமெரிக்காவின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் நாடு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கியூபாவின் தலைவர்களை அமெரிக்க அரசு தேர்ந்தெடுப்பதில்லை என்றும், கியூபா மக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்டவர்கள் என்றும் அவர் வாதிட்டார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், கியூபாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
கடந்த காலங்களில் வெனிசுலா மற்றும் ஈரான் எதிர்கொண்ட அதே நிலையை கியூபாவும் சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா பொருளாதாரத் தடை
மேலும், கியூபாவிற்கு எண்ணெய் விநியோகம் செய்வதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இதன் காரணமாக கியூபாவில் கடுமையான மின்தடை, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உணவு விநியோகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய டயஸ்-கெனெல், அமெரிக்காவின் இந்த "விரோதப் போக்கை" வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இந்த இக்கட்டான சூழலிலும், கியூபாவின் நீண்டகால கூட்டாளியான ரஷ்யா தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. "நாங்கள் கியூபாவை ஒருபோதும் கைவிட மாட்டோம்" என்று ரஷ்ய வெளிவிவகார துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 730,000 பீப்பாய்கள் எண்ணெயுடன் ரஷ்யக் கப்பல் ஒன்று கியூபாவை வந்தடைந்ததமை குறிப்பிடத்தக்கது.
1950-களில் நடைபெற்ற கியூபப் புரட்சிக்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையே நிலவி வரும் இந்த வரலாற்று ரீதியிலான மோதல், தற்போது மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.