திருடப்பட்ட பணத்தை மீட்பேன் - அனுரகுமார திஸாநாயக்க உறுதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்றுவதற்காக மாத்திரம் இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை என்று கூறியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இடைக்கால அரசாங்கத்தின் கீழ் நாட்டை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் உண்மையான விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகளை தற்போதைய நாடாளுமன்றம் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும், புதிய ஆணைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு குழுவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இன்னமும் கொண்டுள்ளது. இந்த நாடாளுமன்றத்தை அமைப்பது நாட்டை ஸ்திரப்படுத்தவும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் உதவாது.
ஜனாதிபதியை வெளியேற்றுவதற்காக மாத்திரம் இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை
குறுகிய காலத்திற்கு இடைக்கால அரசாங்கம் அமைத்து நாட்டை மீண்டும் கொண்டு வர வேண்டும். சகஜநிலைக்கு பின்னர் தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த போராட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை வெளியேற்றுவதற்காக மாத்திரம் அல்ல மாறாக முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதிலேயே கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியை வெளியேற்றுவதே முக்கிய நோக்கமாக இருந்தாலும், 74 ஆண்டுகால தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கை, அரசியல் கலாச்சாரம், நீதித்துறை மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துதல், ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துதல் ஆகியவையே போராட்டத்தின் மையமாக இருந்தது.
மோசடி மற்றும் ஊழலை நிறுத்தி திருடப்பட்ட பணத்தை மீட்பேன் என்று கூறிய அவர், தற்போதைய நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட நிர்வாகத்தால் இந்த நோக்கங்களை அடைய முடியாது என்றும் கூறினார்.