எவரது அழுத்தங்களுக்கும் அடி பணியப் போவதில்லை – உதய கம்மன்பில
எவரது அழுத்தங்களுக்கும் அடி பணியப் போவதில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்கின்றதா அல்லது அமெரிக்க பிரஜையொருவர் அழுத்தங்களை பிரயோகிக்கின்றாரா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாம் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு மேல் இந்த இரண்டு பேரைத் தவிர வேறு எவருமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியும், பிரதமரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சின் விவகாரங்களில் தலையீடு செய்தது கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தூதுவர்கள் தம்மை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அழுத்தங்களை பிரயோகித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த அழுத்தங்களுக்கு எந்த வகையிலும் அடிபணியப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு அழுத்தங்களை பிரயோகிப்பது குறித்து ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் இந்த விடயங்களை அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.