ஓடுவதற்கு தயாரான தலைவர்களுக்கு முன்னால் ஆட்சியை பொறுப்பேற்றுக்கொண்டேன்: ரணில் விளக்கம்
மற்றைய தலைவர்கள் ஓடுவதற்கு சப்பாத்தை தேடிக்கொண்டிருந்த வேளையில் நான் செருப்புக் காலோடு சென்று ஆட்சியைப் பொறுப்பேற்றுக்கொண்டேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியலை ஒதுக்கிவிட்டு நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் ருவன்வெல்ல இல்லத்தில் இன்று (04) பிற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி
'' நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியுடன், நாட்டின் அரசியலும் வீழ்ச்சியடைந்துள்ளதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, முதன்முறையாக அரசியலில்லாத அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
தற்போது மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தாலும் நாடு இன்னும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடவில்லை. எனவே அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
வங்குரோத்து அடைந்துவிட்டதாக அறிவித்திருக்கும் அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வாறு இந்தளவு சலுகைகளை வழங்க முடியும் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
உறுமய, அஸ்வெசும,அரிசி மானியம் வழங்கும் திட்டங்கள் நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தபோது ஏன் செயற்படுத்தப்படவில்லை என்றும் கேட்கிறார்கள்.
அதேபோல், அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கினோம். 2015இற்குப் பிறகு இவ்வாறான சம்பள உயர்வு வழங்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
நாட்டை நாங்கள் பொறுப்பேற்றோம்
எனவே, இந்த நிவாரணங்களை அரசாங்கம் எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்போகிறது என்ற கேள்வி காணப்பட்டது.
மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்த ஒரு நாட்டை நாங்கள் பொறுப்பேற்றோம். ஏனைய தலைவர்கள் ஓடுவதற்கு சப்பாத்து தேடிக்கொண்டிருந்த வேளையில், நான் செருப்புக் காலோடு சென்று ஆட்சியைப் பொறுப்பேற்றேன்.
அது மட்டுமன்றி, சரியான கொள்கையின்படி செயற்பட்டோம். அதனால் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுத்தோம்.
இரண்டு வருடங்களில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப மிகவும் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. வரி அதிகரிப்பு இலகுவானதாக இருக்கவில்லை.
ஆனால் அது மட்டுமே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒரே வழியாக விளங்கியது என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் நாம் வங்குரோத்து நிலையில் இருந்து மீளக்கூடிய சாத்தியம் உள்ளது. ஆனால் அது போதாது. நமது நாட்டில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
எனவே எமது பொருளாதார இலக்குகளின்படி சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |