பொருளாதார நெருக்கடியானது மிக கடுமையான மனிதாபிமான நெருக்கடியாக மாறலாம்:ஐ.நா
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மிக கடுமையான மனிதாபிமான நெருக்கடி வரை அதிகரிக்கக் கூடும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரித்துள்ளது.
இலங்கை எதிர்நோக்கும் மோசமான நெருக்கடி
ஐக்கிய நாடகள் அமைப்பு மற்றும் அதன் கூட்டு அமைப்பினர் இலங்கையில் வாழும் 1.7 மில்லியன் நபர்கள் மற்றும் நெருக்கடியில் மிகவும் பாதிப்புகளை எதிர்நோக்குவோருக்கு உடனடியான தேவைகளை வழங்க 47 மில்லியன் டொலர்களை கோருவதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களுக்கான முகவர் அமைப்பின் பேச்சாளர் Jens Laerke தெரிவித்துள்ளார்.
பல மாதங்களாக தினமும் மின் துண்டிப்பு, எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசைகளில் காத்திருப்பது, வரலாறு காணாத பணவீக்கம் என்பன 22 மில்லியன் இலங்கை மக்களின் வாழ்க்கையை கஷ்ட நிலைமைக்கு தள்ளியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை அரசு 51 பில்லியன் வெளிநாட்டு கடனை செலுத்துவதை கைவிட்டுள்ளது.
வெளிநாட்டு நாணயங்களுக்கு நிலவும் கடுமையான பற்றாக்குறை காரணமாக வர்த்தகர்களுக்கு போதுமான உணவு, எரிபொருள் உட்பட ஏனைய அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது எனவும் Jens Laerke கூறியுள்ளார்.
இலங்கையின் நிலைமை பயங்கரமானது
இதனிடையே இலங்கையின் நிலைமை பயங்கரமானது எனவும் நெருக்கடிக்கு முன்னரே இலங்கை வாழும் 5 வயதுக்கும் குறைந்த சிறார்களின் 17 வீதமானவர்கள் ஏற்கனவே போஷாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி Christian Skoog கூறியுள்ளார்.
குறிப்பாக கடும் போஷாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டுள்ள 56 ஆயிரம் சிறார்களுக்கு உதவ ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.