இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுமாறு கோரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வழக்கு தொடர்வதற்கான, சாட்சிய சேகரிப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு விடயத்தில், மனித உரிமைகள் பேரவை, இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
2024 செப்டெம்பர் 21ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய நாடுகளின் விசாரணைப் பொறிமுறையுடன் ஒத்துழைக்கவேண்டும் என்று கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், எதிர்ப்பை அடக்குவதற்கான சட்டங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதன் மூலம், தனது முன்னோடிகளின் கடும் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும் உரிமைகள் குழு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
ஒடுக்குமுறைகள்
மனித உரிமைகள் ஆர்வலர்கள், துஸ்பிரயோகங்களில் இருந்து தப்பியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அச்சுறுத்தல்கள் மற்றும் பழிவாங்கல்களுடன் குறிவைக்கும் சக்திகள் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று கண்காணிப்பகம் கேட்டுள்ளது.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் வோல்கர் டர்க்கின் அண்மைய அறிக்கையை கோடிட்டுள்ள கண்காணிப்பகம், தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கங்கள், குறிப்பாக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரமான துஷ்பிரயோகங்களில் தொடர்புடைய அதிகாரிகளை பொறுப்பேற்கத் தவறிவிட்டன என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி திஸாநாயக்க, நீதியை உறுதி செய்வதன் மூலமும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆர்வலர்களைப் பாதுகாப்பதன் மூலமும் அந்த வரலாற்றை மாற்ற முடியும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள், இலங்கையில் நடக்கும் உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்வதற்கும், நீதிக்கான நம்பிக்கையை வழங்குவதற்கும், துஸ்பிரயோகம் செய்யும் அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்நாடியாக இருப்பதற்கும் முக்கியமான வழிமுறையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் நிபுணர்கள் சீர்திருத்தத்திற்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ள நிலையில், அடுத்தடுத்து வந்த இலங்கை நிர்வாகங்கள் அவற்றை புறக்கணித்துள்ளன.
1983-2009 உள்நாட்டுப் போரின் போது அரசாங்கப் படைகளாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் செய்யப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் 1987-89 ஜேவிபி கிளர்ச்சி உட்பட காலங்களில் பாதுகாப்புப் படைகளின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பரிந்துரைகளும் இதில் அடங்குகின்றன.
மனித உரிமை மீறல்கள்
2022 செப்டம்பரில், சர்வதேச நாணய நிதியம், இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு விதிகளின் பரந்த பயன்பாடு, உத்தியோகபூர்வ ஊழலை ஆய்வு செய்யும் சிவில் சமூகத்தை கட்டுப்படுத்துகிறது என்பதை கண்டறிந்துள்ளது. இந்தநிலையில் அனுரகுமார திஸாநாயக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதாக உறுதியளித்துள்ளார் என்பதை மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இந்துக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற சொத்துக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றன. அத்துடன் நாட்டின் பெரும்பான்மை மதத்தினருக்கான இடங்களை பௌத்த தலங்களாக மாற்றுவதற்கு இலங்கை அதிகாரிகள் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தொல்பொருள் திணைக்களம், வனத் திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், இராணுவம் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட அமைப்புக்கள், தேசியவாத பௌத்த மதகுருமார்களுடன் இணைந்து இந்து சிலைகளை சேதப்படுத்துவது அல்லது அகற்றுவது, வழிபாட்டாளர்களை அச்சுறுத்துவது, தாக்குவது அல்லது கைது செய்வது போன்ற ஒரு முறை உருவாகியுள்ளது.
இதேவேளை ஜே.வி.பி கிளர்ச்சி மற்றும் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்கள் உட்பட, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உலகின் மிக உயர்ந்த விகிதங்களில் உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
எனினும், பல தசாப்தங்களாக காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிப்படுத்தவோ அல்லது பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரவோ அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.
எனவே, மனித உரிமைகள் பேரவையானது, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்பான குற்றச் செயல்களுக்குப் பொறுப்புக்கூறல் மற்றும் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையை இரண்டு ஆண்டுகளுக்கு புதுப்பிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பேரவையின் இந்தத் தீர்மானம், இந்த இக்கட்டான சூழ்நிலையில் சர்வதேச கவனத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், கடுமையான சர்வதேச குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் ஒரு நாள் நீதியை எதிர்கொள்ள நேரிடும் என்ற கொள்கையை நிலைநிறுத்துவதற்கும் ஒரு முக்கிய வழிமுறையாகும் என்று மீனாட்சி கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |