பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்துச் செய்ய இதுவே பொருத்தமான தருணம்! மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர்
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கு இதுவே பொருத்தமான தருணம் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியுமான லக்ஷ்மன் டி.பி.தெஹிதெனிய தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எழுதியுள்ள கடிமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் இலங்கையின் சட்டப் புத்தகத்தில் ஒரு பெரும் களங்கமாகத் தொடர்கிறது என்றும், அதை ரத்து செய்வதற்கு இதைவிடச் சிறந்த தருணம் இல்லை என்றும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் லக்ஷ்மன் டி.பி.தெஹிதெனிய குறித்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
புதிய வரைவு மசோதா
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான புதிய வரைவு மசோதா குறித்த ஆணைக்குழுவின் கருத்துக்களை முன்வைத்து, அக்கடிதத்தின் ஒரு நகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 'பயங்கரவாதம்' என்ற குற்றத்தை சாதாரண சட்டத்தின் கீழ் கையாள வேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரைப்பதாக அக்கடிதம் வலியுறுத்துகிறது.
இது ஆணைக்குழுவால் முன்பே செய்யப்பட்ட ஒரு பரிந்துரை என்றும் அது குறிப்பிடுகிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மனித உரிமைத் தரங்களுடன் இணக்கமாக இருப்பதை உறுதி செய்வதற்கான சட்ட சீர்திருத்தங்களின் அவசியத்தையும் அது எடுத்துரைக்கிறது.

மேலும், பயங்கரவாதம் தொடர்பான எந்தவொரு குற்றத்திற்கும் உரிய சட்டம், இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயம் மற்றும் இலங்கையின் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுடன் முழுமையாக இணக்கமாக இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் அது பரிந்துரைக்கிறது.
தடுப்புக் காவல் உத்தரவு
பரிந்துரைகளில், 'பயங்கரவாதக் குற்றம்' என்பதன் வரையறையை கணிசமாகத் திருத்தி, அதன் வரையறையின் எல்லையைக் குறைப்பது, பயங்கரவாதக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட எந்தவொரு நபருக்கும் எதிராகப் பிறப்பிக்கப்படும் எந்தவொரு தடுப்புக் காவல் உத்தரவும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நீதித்துறை மறுஆய்வுக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்வது, பயங்கரவாதக் குற்றச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எந்தவொரு சந்தேக நபருக்கும் பிணை வழங்க நீதிபதிக்கு அர்த்தமுள்ள அதிகாரம் இருப்பதை உறுதி செய்வது, மற்றும் ஒரு நீதிபதிக்கு முன்பாக எந்தவொரு வாக்குமூலத்தையும் அளிப்பதற்கு முன்னர், சந்தேக நபருக்கு சட்ட ஆலோசனை பெறுவதற்கான அர்த்தமுள்ள வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வது ஆகியவை உள்ளடக்கப்பட வேவண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் லக்ஷ்மன் டி.பி. தெஹிதெனிய தனது கடிதத்தி;ல் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.