ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா எவ்வாறு நடைபெறும்? ஒபாமா பங்கேற்பு - ட்ரம்ப் புறக்கணிப்பு
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்திய / இலங்கை நேரப்படி, இன்றிரவு (ஜனவரி 20) சுமார் 10.30 மணி அளவில் பொறுப்பேற்க உள்ளனர்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகே அதிகாரப்பூர்வமாக இவர்கள் இருவரும் அமெரிக்க அதிபர் என்றும் துணை அதிபர் என்றும் முறையே அழைக்கப்படுவர்.
இந்த நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்கவில்லை.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் காரணமாக முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப்படை வீரர்கள் களமிறக்கப்பட்டு வாஷிங்டன் டி.சி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேபோன்று பதவியேற்பு விழாவை நேரடியாக பார்க்க அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர்கள் பராக் ஒபாமா, பில் கிளின்டன், மற்றும் ஜார்ஜ் டபுள்யூ புஷ் ஆகியோர் பைடனின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.
கொரோனா கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், லேடி காகா நிகழ்ச்சி என அந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் என்னவெல்லாம் நடைபெறும்? பதவியேற்பு விழா என்றால் என்ன? இந்த துவக்க விழா என்பது புதிய அதிபரின் அதிகாரப்பூர்வ தொடக்கமாகும்.
இது வாஷிங்டன் டிசியில் நடைபெறும். இந்த நாளில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிகாரப்பூர்வமாக உறுதிமொழி கூறி பதவியேற்றுக் கொள்வார்.
அது, "அமெரிக்க அதிபரின் பணியை நான் உண்மையாக நிறைவேற்றுவேன்; அரசமைப்பை பாதுகாக்க என்னால் முடிந்தவரைச் சிறப்பாக செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன்" என்பதாகும்.
இந்த உறுதிமொழிகளை கூறியவுடன் ஜோ பைடன் அமெரிக்காவின் 46ஆவது அதிபராவார்.
உறுதியேற்பு விழாவும் நிறைவடைந்துவிடும். ஆனால் கொண்டாட்டங்கள் அல்ல. அதேபோல கமலா ஹாரிஸும் உறுதிமொழி கூறி துணை அதிபராகப் பதவியேற்பார். இந்த விழா எப்போது நடைபெறும்? சட்டப்படி ஜனவரி 20ஆம் தேதி இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களுக்கான நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடக்க உரைகள் ஆரம்பமாகும். அதன்பின் மதியம் சுமார் 12 மணியளவில் ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் பதவியேற்றுக் கொள்வர்.
அதன்பின் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் குடிபுகுவார். அதுதான் அடுத்த நான்கு வருடங்களுக்கு அவரின் வீடு. பாதுகாப்புகள் எவ்வாறு இருக்கும்? பொதுவாக பதவியேற்பு நாளிலேயே விரிவான பாதுகாப்பு திட்டங்கள் இருக்கும்.
அதுவும் தற்போது ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நடைபெற்ற வன்முறைக்கு பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் நகரின் பல்வேறு பகுதிகளை அடைத்துள்ளனர். பாதுகாப்பு திட்டங்களுக்கான ஏற்பாடுகளை ரகசிய சேவை கையில் எடுத்துள்ளது.
மேலும் இவர்களுடன் 15 ஆயிரம் தேசிய காவல் படைகளும் இருக்கும். இதனோடு போலீஸ் அதிகாரிகளும் இருப்பர். வாஷிங்டன் டிசியில் ஏற்கனவே அவசர நிலை அமலில் உள்ளது. பதவியேற்பு விழாவின்போதும் அந்த நிலை தொடரும்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் ரகசிய சேவையின் தலைவர் மேட் மில்லர் வெள்ளியன்று பத்திரிகையாளர்களிடம் இந்த விழாவிற்கான திட்டங்கள் ஒரு வருடமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
பதவியேற்பை வெளியில் செய்ய வேண்டும் என பைடன் வலியுறுத்தியுள்ளார். மேலும் விருந்தினர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் வருகை தருவாரா? புதிய அதிபர் பதவியேற்பதை முன்னிருந்த அதிபர் பார்க்க வேண்டும் என்பது வழக்கம்.
அது ஒரு மாதிரியான சங்கடத்தையும் ஏற்படுத்தும். ஆனால் இந்த வருடம் அது வேறு கதை. ஆம் டிரம்ப் வரமாட்டார். "ஜனவரி 20ஆம் தேதி நான் பதவியேற்பு விழாவிற்கு செல்லப்போவதில்லை," என டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜனவரி 8ஆம் தேதியன்று தெரிவித்தார். அவர் ஃபுளோரிடாவில் உள்ள தனது இல்லத்திற்கு பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்பின் ஆதரவாளர்கள் சிலர், ஆன்லைனில் "டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்கும்" விழாவிற்கு திட்டமிடுவதாக தெரிவித்திருந்தனர். டிரம்பிற்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் இந்த விழாவில் கலந்து கொள்ளப்போவதாக 68,000 பேர் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தனர்.
டிரம்பின் பதவியேற்பின் போது, ஹிலரி கிளிண்டன் மற்றும் அவரது கணவரும் முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன் ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
கடந்த நூற்றாண்டில் ஜான் ஆடம்ஸ், ஜான் க்வின்சி ஆடம்ஸ் மற்றும் ஆண்ட்ரூ ஜான்சன் ஆகிய அதிபர்கள் மட்டுமே அடுத்த அதிபர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இருப்பினும் பதவியேற்பு விழாவில் தாம் கலந்து கொள்ளப் போவதாக துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். கொவிட்-19 இந்த பதவியேற்பு விழாவை எவ்வாறு மாற்றியுள்ளது? பொதுவாக இந்த பதவியேற்பு விழாவின்போது வாஷிங்டன் டிசிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவர். 2009ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ஒபாமா முதல்முறை பதவியேற்கும்போது இருபது லட்சம் பேர் வருகை தந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்தமுறை கொண்டாட்டங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. பைடனின் குழுவினர் அமெரிக்க மக்கள் தலைநகருக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்திற்கு பிறகு வாஷிங்டன் அதிகாரிககளும் இதே கோரிக்கையை விடுத்தனர். அணிவகுப்பைக் காண இருதரப்பிலும் அமைக்கப்படும் மேடை தற்போது அகற்றப்பட்டுள்ளது.
ஒரே ஒரு நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. பைடனும், கமலா ஹாரிஸும் அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டத்திற்கு முன்பு பதவியேற்றுக் கொள்வர். இது முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் (1981) காலத்தில் தொடங்கிய வழக்கம். சுமார் 200 பேர் சமூக இடைவெளியை பின்பற்றி மேடையில் அமர்ந்திருப்பர் என வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். மேலும் நிகழ்ச்சியின் ஒருசில நாட்களுக்குள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் உறுதி மொழி கூற இருப்பதால் மாஸ்க் அணியப்போவதில்லை என ஜூன் மாதம் பைடன் தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில் இந்த நிகழ்ச்சியை காண சுமார் 2 லட்சம் டிக்கெட்டுகள் வரை வழங்கப்படும் ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக அது 1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அமைதியாக நடைபெறும் பதவியேற்பு விழாவின் பாரம்பரிய வழக்கமான ராணுவ தளபதி படைகளை பார்வையிடுதல் நிகழ்ச்சி இந்தமுறையும் நடைபெறும். ஆனால் வழக்கமாக நடைபெறும் ராணுவ அணிவகுப்பு, `இணைய அணிவகுப்பாக` அமெரிக்கா முழுவதும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைடன், ஹாரிஸ் மற்றும் அவர்களின் துணைகள் ராணுவத்தினரால், இசை முழங்க வெள்ளை மாளிக்கைக்கு அழைத்து செல்லப்படுவர். பதவியேற்பு நிகழ்ச்சியின் டிக்கெட்டை பெறுவது எப்படி? பொதுவாக மேடையின் அருகில் அமர்ந்து மற்றும் நின்றுக் கொண்டு பார்க்கும் இடங்கள், அணிவகுப்பு செல்லும் பாதை ஆகியவற்றிற்கு டிக்கெட்டுகள் பெற வேண்டும்.
எனவே நீங்கள் விழாவை அருகில் பார்க்க வேண்டும் என்றால் உள்ளூர் பிரதிநிதிகளிடம் பேச வேண்டும். செனட்டர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக சில எண்ணிக்கையில் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
ஆனால் இந்த வருடம் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. நட்சத்திர விருந்தினர்கள் யார்? கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டையும் போல இந்த ஆண்டும் நட்சத்திர விருந்தினர் நிகழ்ச்சி நடைபெறும். ஜோ பைடனின் ஆதரவாளரான அமெரிக்க பாடகி லேடி காகா தேசிய கீதம் பாடுவார். நடிகை ஜெனிஃபர் லோபஸின் பாடல் நிகழ்ச்சியும் உண்டு.
பைடனின் பதவியேற்புக்குப் பிறகு அமெரிக்க நடிகர் டாம் ஹான்க் 90 நிமிட நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி தேர்தலின்போது டிரம்புக்கு ஆதரவளித்த கன்சர்வேடிவ் தொலைக்காட்சியான ஃபாக்ஸ் நியூஸை தவிர அனைத்திலும் ஒளிபரப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2009ஆம் ஆண்டு ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது அமெரிக்க ஆர்வலரும் பாடகியுமான அரிதா ஃபிராங்க்லின் அமெரிக்க தேசிய பாடலை பாடினார். ஆனால் இம்மாதிரியாக விருந்தினர்களை அழைப்பதில் டிரம்பிற்கு அதிக சிக்கல் இருந்ததாக கூறப்படுகிறது.
டிரம்ப் நிகழ்ச்சிக்கு அழைத்த பாடகர்கள் வராமல் வேறு விருந்தினர்களை அவர் அழைக்கும் சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பதவியேற்ற முதல் நாள் பைடன் என்ன செய்யவுள்ளார்? பைடன் தாம் பதவியேற்றவுடன் அடுத்தடுத்த பல நிர்வாக உத்தரவுகளை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதில் முதலாவதாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய டிரம்பின் முடிவை மாற்றி உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல முக்கிய முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வர பயணத்தடை விதித்த டிரம்பின் உத்தரவையும் மாற்றி அமைக்கவுள்ளார் என கூறப்படுகிறது.