நாசாவில் நுழைந்தது எப்படி - எதிர்கொண்ட சவால்கள் - ஸ்வாதி மோகன்
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெற்றிகரமாகத் தன் 'பெர்சவரன்ஸ்' விண் ஊர்தியை கடந்த பிப்ரவரி 18-ம் தேதி செவ்வாய் கோளில் தரை இறக்கிவிட்டது.
இதில் முக்கிய பங்காற்றியவர் இந்திய வம்சாவளி அமெரிக்கரான முனைவர் ஸ்வாதி மோகன். விண் ஊர்தியின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான தலைவராக இவர் உள்ளார்.
மார்ஸ் 2020 பெர்சவரன்ஸ் விண் ஊர்தி விண்வெளியில் சரியான திசையில் பயணிப்பதை உறுதி செய்வது, விண் ஊர்தி தேவையான இடத்துக்கு நகர்த்திக் கொண்டு செல்வது எல்லாம் இவருடைய பொறுப்புகள்தான்.
குறிப்பாக மார்ஸ் 2020 மார்ஸ் 2020 பெர்சவரன்ஸ் விண் ஊர்தியை செவ்வாயின் மண்டலத்துக்குள் நுழையச் செய்வது தொடங்கி தரையிறக்குவது வரை இவரது பங்கு மிகவும் முக்கியமானது. அவரைத் தொடர்பு கொண்டு பிபிசி பேட்டி கண்டது.
கேள்வி: பல வருட உழைப்புக்குப் பிறகு, இத்தனை பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகான சில மணி நேரங்களை எப்படிக் கடந்தீர்கள்?
பதில்: அது கொஞ்சம் கனவு போல இருந்தது. சமீபத்தைய மார்ஸ் 2020 விண்வெளித் திட்டம் கொஞ்சம் சிக்கலானது. எனவே அது வெற்றியாக கொண்டாடப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இறுதி நிமிடத்தில் எல்லாமே ஒருங்கிணைந்து வந்தது தான் வெற்றி.
கே: அந்த கடைசி சில நிமிடங்களில் உங்கள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருந்தது எனக் கூற முடியுமா?
ப: ஒரு திட்ட விவரிப்பாளராக என்ன நடக்கிறது, நான் என்ன கூற வேண்டும் என்கிற என் பணியில் கூடுதல் கவனத்தோடு இருந்தேன். பல விஷயங்கள் மிகக் கச்சிதமான வரிசையில் நடக்க வேண்டி இருந்தது. ஒவ்வொரு விஷயம் நடந்து முடிந்த உடன், நான் அடுத்த விஷயத்தில் கவனம் செலுத்தினேன். என்ன நடக்கிறது என்பதை உணர்வு ரீதியாகப் புரிந்து கொள்ளப் போதுமான திறன் என்னிடம் இல்லை.
கே: ஒரு திட்டத்துக்கு எட்டு வருடம் முதலீடு செய்வது என்பது மிக நெடிய காலம். இந்தப் பணிக் காலத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்துக் கூறுங்களேன்?
ப: எட்டு வருடங்கள் இந்த திட்டத்தில் பணியாற்றியதை என் வாழ்நாளில் மிகப் பெருமையாகக் கருதுகிறேன். இருப்பினும் இந்த எட்டு ஆண்டுகளில் நான் முதலில் இழந்தது என் தூக்கத்தைத் தான். இந்த திட்டத்தின் வன்பொருட்கள் (hardware) வரத் தொடங்கியதில் இருந்து எனக்கு தொடர்ந்து அழைப்பு வரத் தொடங்கின. காரணம் நாங்கள் அதை பல்வேறு சோதனைக்கு உட்படுத்திக் கொண்டிருந்தோம். எனவே எப்போதும் என் தொலைபேசியை என்னுடனேயே வைத்திருந்தேன்.
அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது, என்ன சவால்கள் வந்தாலும் அதை எதிர்கொள்வது, தொடர்ந்து இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிற வேகமும், ஊக்கமும் கொஞ்சம் தனிப்பட்ட வாழ்கையில் தொய்வை ஏற்படுத்தியது. அதோடு எனக்கு தொலை பேசி அழைப்போ அல்லது அலுவலகத்துக்கு வருமாறு திடீர் அழைப்போ வரும் போதெல்லாம் என் குடும்பம் சில தியாகங்களைச் செய்ய வேண்டி இருந்தது. இந்த விஷயத்தில் என் குடும்பம் எனக்கு மிகவும் பக்கபலமாகத் துணை நின்றது.
கே: நாசாவில் உங்கள் பயணத்தைக் குறித்துக் கூற முடியுமா
ப: நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே விண்வெளி சம்பந்தமாக வேலை பார்க்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். நான் அமெரிக்காவில் இருந்ததால் எனக்கு விண்வெளி என்ற உடன் நாசா தான் என் கவனத்துக்கு வந்தது. எனவே என்னால் நாசா குறித்து என்ன எல்லாம் தேடித் தெரிந்து கொள்ள முடியுமோ அதை எல்லாம் தேடி அறிந்து கொண்டேன்.
நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே என் முதல் உள்ளகப் பயிற்சியை (இன்டர்ன்ஷிப்) நாசாவின் கொட்டார்ட் ஸ்பேஸ் ஃப்ளைட் சென்டரில் மேற்கொண்டேன். அதன் பின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பின் போது, கோடை காலத்தை ஜெட் ப்ரொபல்சன் லெபாரட்டரியில் செலவழித்தேன். அப்போதே நிறைய பேருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன். அதன் பின் கென்னடி ஸ்பேஸ் சென்டரில் ஓர் உள்ளகப் பயிற்சியை மேற்கொண்டேன்.
அதன் பிறகு க்ராஜுவேட் பள்ளிக்குச் சென்ற போது நாசாவின் ஜான்சன் ஸ்பேஸ் சென்டர் மற்றும் நாசாவின் மார்ஷல் ஸ்பேஸ் சென்டரில் பணிபுரிபவர்களோடு பேச வாய்ப்பு கிடைத்தது. எனவே விண்வெளித் துறையைப் பல்வேறு கோணங்களில் இருந்து பார்க்க இந்த வாய்ப்புகள் பயன்பட்டன.
கே: நீங்கள் விண்வெளி மீது காதல் கொள்ள ஸ்டார் டிரெக் காரணம் எனக் கூறியுள்ளீர்கள்? உங்களை ஸ்டார் டிரெக் எப்படி ஈர்த்தது?
ஆம். 9 அல்லது 10 வயது இருக்கும் போது 'ஸ்டார் டிரக் நெக்ஸ்ட் ஜெனரேஷன்' என்கிற தொலைக்காட்சித் தொடரில் ஒரு பகுதியைப் பார்த்தேன். அதில் பேரண்டத்தில் மிக அழகான படங்கள் பல்வேறு சூழலில் காட்டி இருந்தார்கள். அந்தத் தொடரில் வரும் பிரிட்ஜ் ஆஃப் எண்டர்பிரைசில் நான் பயணிக்க விரும்பினேன். பறந்து விரிந்து கிடக்கும் விண்வெளியில் புதிய விஷயங்களைக் கண்டு பிடிக்க வேண்டும் என விரும்பினேன்.
அங்குதான் எல்லாம் தொடங்கியது. இந்தத் தொடருக்குத் தேவையான படங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன எனத் தேடினேன். அந்தத் தேடல் ஹப்பில் விண்வெளித் தொலைநோக்கிக்கு இட்டுச் சென்றது. அப்படியே விண்வெளித் துறையில் என் பயணம் வளர்ந்தது.
கே: நீங்கள் இன்னும் இந்தியா உடன் தொடர்பில் இருக்கிறீர்களா?
ப: ஆம். இப்போதும் என் குடும்பத்தின் சொந்த பந்தங்கள் நிறைய பேர் இந்தியாவில் தான் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக பெங்களூரில் என் தாத்தா பாட்டி பல வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். கோடை கால விடுமுறையை இந்தியாவில் ஊர் சுற்றிக் கழித்திருக்கிறேன்.
கே: இந்தியா போன்ற பல நாடுகளும் செவ்வாயில் விண் ஊர்தியைத் தரையிறக்க இலக்கு வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் கருத்து மற்றும் வழிகாட்டுதல்கள் என்ன?
எந்த ஒரு கோளிலும் தரையிறங்குவது என்பது சவாலான விஷயம் தான். பல விஷயங்கள் சரியாக நடக்க வேண்டும்.எந்த கோளில், எந்த நேரத்தில், எந்த இடத்தில் தரையிறக்கப் போகிறோம் என்பதைப் பொறுத்து பல வேறுபட்ட சூழல்கள் நிலவும். பல தடைகள் ஏற்படும்.
அதே குறிக்கோளோடு இருப்பவர்கள் மேற்கொண்ட விஷயங்களில் இருந்து எவ்வளவு கற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவு கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் என்னால் கொடுக்க முடிந்த நல்ல ஆலோசனை. சில நேரங்களில் நம் வெற்றியை விட, நம் தோல்வியில் இருந்துதான் அதிகம் கற்றுக் கொள்ள கொள்வோம்.
- BBC - Tamil