வர்த்தகர்களின் நன்மைக்காக சங்கத்தை வைத்துக் கொண்டு எப்படி கடைகளை பூட்டுமாறு கூற முடியும் என கேள்வி
வர்த்தகர்களின் நன்மைக்காக சங்கத்தை வைத்துக் கொண்டு எப்படி கடைகளை பூட்டுமாறு கூற முடியும் என வவுனியா வர்த்தகர் சங்கத்தின் உப தலைவர் எம்.கே.ஆரிப் தெரிவித்தார்.
வவுனியாவில் வர்த்தக நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் மூடுமாறு வவுனியா மாநகரசபை வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் வர்த்தகர் சங்கத்தின் மாதாந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மாநகரசபையின் தீர்மானம்
மேலும் கூறுகையில், வவுனியா வர்த்தகர்களின் நலன் கருதியும் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் நலன் கருதியும் வற்புறுத்தல் இல்லாது கடைகளை பூட்டி ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கியதை கடந்த காலங்களில் நாங்கள் பார்த்திருக்கின்றோம். ஆனால், இப்போது வந்துள்ள மாநகரசபை அதனை நன்றாகவே செய்வதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நாங்கள் வர்த்தகர் சங்கம் என்ற ரீதியில் பல வர்த்தகர்களிடம் மறைமுகமாக கேட்டபோது கடைகளை பூட்டுவதனால் ஏற்படும் சாதகம் தொடர்பாகவும், அதனால் ஏற்படும் பாதகம் தொடர்பாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
இந்த நிலையில் எல்லாவற்றிற்கும் பொதுவாக சட்டத்தை பார்த்தால் தொழில் ஸ்தாபனத்தினை பல வந்தமாகவோ அல்லது அன்பாகவோ பூட்ட சொல்லுகின்ற சட்டம் அல்லது அதிகாரம் எங்களுக்கு இல்லை. ஆகவே, நட்பு ரீதியான ஒரு இணக்கப்பாட்டினை செயல்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம்.
மாநகரசபை எடுக்கின்ற முயற்சிக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம்.
இணங்கிப் போகின்ற நிலைமை
இது தொடர்பில் மற்றவர்களிடம் கேட்கின்ற போது பல்வேறு கருத்துக்கள் வருவதன் காரணமாக பொதுச் சபையை கூட்டி ஒரு கருத்துக் கணிப்பின் ஊடாகவோ அல்லது வாக்கெடுப்பின் ஊடாகவோ ஒரு நிலைப்பாட்டினை எடுத்து பெரும்பான்மையினுடைய நிலைப்பாட்டின் அடிப்படையில் அதற்கு இணங்கிப் போகின்ற நிலைமை எமக்கு இருக்கிறது.
எனினும் இன்றைய கூட்டத்தில் எந்தவிதமான ஒரு முடிவுக்கும் வர முடியாமல் போய் உள்ளது. ஆகவே மாநகர சபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை சந்தித்து அவர்களுடைய நிலைப்பாடு இவ்வாறு நாளுக்கு நாள் சீரான நடைமுறையில் அமையும் என்று அவர்கள் கருத்து சொன்னால் பொதுச் சபையை கூட்டி வாக்கெடுப்பு நடத்தும் நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் விடுபட நினைக்கிறோம் அல்லது கடைகளை திறக்கும் விடயத்தில் உத்தியோபூர்வமாக விருப்பத்தை கேட்டு எமக்கு ஒரு முடிவை எடுத்து தாருங்கள் என வற்புறுத்தினால் நாங்கள் பொதுச் சபையைக் கூட்டுவோம்.
அவர்கள் கடைகளை பூட்ட சொல்வதும் சட்டமாக சொல்லவில்லை. ஆகவே நாங்களும் பலவந்தம் இல்லாமலே செய்வதற்கு பார்க்கிறோம். ஒரு தொழில் ஸ்தாபனத்தினை பூட்டுமாறு கூறுவதற்கு நீங்கள் யார்? வர்த்தகர்களின் நன்மைக்காக சங்கத்தை வைத்துக் கொண்டு எப்படி கடைகளை பூட்டுமாறு கூற முடியும்.
தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது வேறு தொழில் ஸ்தாபனத்தை மூடுவது என்பது வேறு. ஆகவே, சட்டத்தில் இல்லாத ஒரு விடயத்தை வலுக்கட்டாயமாக செய்யுமாறு கூறி நாங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. இதில் 100 வீம் ஒற்றுமைப்பட்டு எல்லோரும் ஒரு முடிவுக்கு வந்தால் நாங்கள் அதில் ஒரு பங்காளியாக இருப்போம். மாநகர சபையின் முயற்சிக்கும் நாங்கள் ஒத்துழைப்பாக இருக்கவே தற்போது விரும்புகிறோம் என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




