தகுதியுடைய பயனாளிகள் 2,162 பேருக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் வீட்டுத் திட்டம்!
அரசாங்கத்தின் தூரநோக்குக் கொள்கைக்கிணங்க, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 2, 162 வீட்டுத் திட்டங்களுக்கான பெயர்ப்பட்டியல் முழுமையடைந்து நூற்றுக்கு நூறு சதவீதம் தகுதியுடைய பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலாரும் வடக்கு, கிழக்குக்கான விசேட மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளருமான கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், ”கட்சி பேதமற்ற மக்கள் சேவை தொடரும்” என்ற தலைப்பில் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு,
கடந்த ஜனவரி தேர்தல் பிரசாரத்தின் போது, சிறிலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் மக்களின் முன்வைக்கப்பட்ட நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு நலன்சார்ந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்களுக்கான இத் திட்டங்களில் எந்தவித கட்சி பேதங்களோ, பிரதேசவாதங்களோ பார்க்கப்படவில்லை. இத்தகைய நிலையில்தான் வடமாகாணத்தின் யாழ். மாவட்டத்துக்காக அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்களை நிறைவேற்றும் பணி முன்னிலைப்படுத்தப்பட்டது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய, யாழ். மாவட்டத்துக்கான வீட்டுத்திட்டங்களை எந்தவித அரசியல் பாகுபாடுமின்றி முற்றுமுழுதாக நிறைவேற்றிக்கொடுக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. அந்தவாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, மக்கள் நலன் சார்ந்த வீட்டுத்திட்டங்களை முற்றுமுழுதாக மக்களுக்கு வழங்கக்கூடியதாக இருந்திருக்கிறது. இச் செயற்றிட்டத்தை முழுமைப்படுத்துவதற்கு உறுதுணையாய் இருந்த அரசாங்க உத்தியோகத்தர்கள். மக்கள் பிரதிநிதிகள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் இத் தருணத்தில் நன்றிசொல்லக் கடைப்பட்டிருக்கிறேன்.
எம்மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், பெருவெற்றிநடை போடுகிறது. மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையினை நாம் பெரிதும் மதிக்கின்றோம் அம்மக்களின் வாழ்வாதாரத்தை அரசியல், கட்சி பேதமின்றி மேம்படுத்தும் வேலைத் திட்டங்களையும் அபிவிருத்திகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். உண்மையான பயனாளிகள் நூறு வீதம் நிச்சயமாகப் பயனடைவர். இதற்கான ஒத்துழைப்பை அனைத்துத் தரப்பினரும் நல்கவேண்டும் என்ற வேண்டுகோளையும் இச்சந்தர்ப்பத்தில் முன்வைக்கின்றேன். என்று குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.