முத்துராஜாவை இலங்கைக்கு திருப்பியனுப்பப் போவதில்லை: தாய்லாந்து மன்னரின் தீர்மானம்
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பில் இருந்தபோது தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா என்ற யானையை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப் போவதில்லை என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
குறித்த யானைக்கு ஏற்பட்டிருந்த பல காயங்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர், அது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் என்ற உறுதிமொழியுடன், 2023 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து முத்துராஜா தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது, தற்போது குறித்த யானை இப்போது முழுமையாக குணமடைந்துள்ளது.
முத்துராஜா
எனினும், அதனை திருப்பியனுப்புவதில்லை என்று தாய்லாந்தின் மன்னர் தீர்மானித்துள்ளதாக, இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலையின் இயக்குநர் சந்தன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, தெஹிவளை தேசிய விலங்கினச்சாலையை சேர்ந்த மருத்துவக் குழு, யானையின் நிலையை அறிந்துக்கொள்வதற்காக, தாய்லாந்து அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அந்த நாட்டுக்கு சென்றது.
அந்த நேரத்தில், தாய்லாந்து அதிகாரிகள் குழுவினர், யானை நன்றாக குணமடைந்து வருவதாக இலங்கை குழுவிடம் தெரிவித்திருந்தனர்.
தாய்லாந்து அரசு
அந்த யானையின் சிகிச்சைக்காக தாய்லாந்து அரசாங்கம் 200 மில்லியன் இலங்கை ரூபாய்களை செலவிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், முத்துராஜா யானையை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று நாட்டின் மன்னர் முடிவு செய்துள்ளதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
அளுத்கமவில் உள்ள விஹாரை ஒன்றின்; பராமரிப்பில் இருந்தபோது, சுமார் 12 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த குறித்த யானை, தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்படுவதற்கு முன்னர் வரை, கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்தே 2001 இல் அதனை அன்பளிப்பாக வழங்கிய தாய்லாந்து அரசாங்கம், 2023 ஜூலை 2 ஆம் திகதியன்று சிகிச்சைக்காக, தாய்லாந்துக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.