கொழும்பின் முக்கிய பகுதியில் இருவாரத்திற்குள் அகற்றப்படவுள்ள ஹோட்டல்கள்! அமைச்சர் அறிவிப்பு
கொழும்பு - கல்கிஸ்சை கடற்கரையோரத்தை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 27 சட்டவிரோத ஹோட்டல்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அகற்றப்படும் என அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
காணி உரித்து வழங்குவதற்கான நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், பொது மக்களுக்கு சட்டத்தின் பிரகாரம் காணி உரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஊடாகவே காணி முறைகேடுகள் இடம்பெற்றன. அரசியல் தலையீடுகளுடன் தான் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்றன.
பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.சந்திரசேன, துமிந்த திஸாநாயக்க ஆகியோர் அரசியல் அதிகாரத்துடன் அரச காணிகளை கைப்பற்றியுள்ளார்கள்.

அவர்களுக்கு எதிராகவும் தற்போது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பிரதான பேசுபொருளாக காணப்பட்ட மல்வானை சொகுசு இல்லம் மற்றும் காணி, கதிர்காம பகுதியில் சொகுசு இல்லம் மற்றும் அதனுடனான காணி அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
காணி வழங்கல்
மல்வானை இல்லத்தை பல்கலைக்கழக விடுதியாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 2 வருட காலத்தில் ஒரு அடி நிலத்தை கூட சட்டவிரோதமான முறையில் எவருக்கும் வழங்கவில்லை. காணி வழங்கல் நடவடிக்கைகள் சட்டத்தின் பிரகாரமே முன்னெடுக்கப்படுகிறது.
கல்கிஸ்சை கடற்கரையோரத்தை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 27 சட்டவிரோத ஹோட்டல்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அகற்றப்படும். சட்டத்தின் பிரகாரமே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.
மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்