உயிருக்கு ஆபத்தான ஏர்பேக் கோளாறு..! வாகனங்களை மீளப்பெறுவதாக ஹோண்டா மற்றும் டொயோட்டா அதிரடி அறிவிப்பு
ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹோண்டா(Honda) மற்றும் டொயோட்டா (Toyota) ஆகியவை ஆபத்தான முறையில் ஏர்பேக் கோளாறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதுடன், இதனால் அமெரிக்காவில் சுமார் 16 இலட்சம் வாகனங்களை மீளப்பெறுவதாக அறிவித்துள்ளன.
டகாட்டா(Takata) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஏர்பேக் உதிரிப்பாகங்களில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, அவை வெடித்து சிதறி பாரிய காயங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் அதிரடி முடிவு
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, கடந்த வெள்ளிக்கிழமை(20.11.2026) இந்த வாகன மீளப்பெறல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம்(NHTSA) வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், குறித்த ஏர்பேக்குகள் செயல்படும்போது அவற்றின் உதிரிப்பாகங்கள் வெடித்துச் சிதறக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கூர்மையான உலோகத் துண்டுகள் வாகனத்தின் உட்பகுதிக்குள் சிதறி, சாரதிகள் மற்றும் பயணிகளுக்குப் படுகாயங்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஹோண்டா நிறுவனம் தனது ஹோண்டா மற்றும் அகுரா (Acura) வகைகளைச் சேர்ந்த சுமார் 810,592 வாகனங்களை மீளப்பெறுவதாக அறிவித்துள்ளது.
அதேவேளை, டொயோட்டா நிறுவனம் தனது டொயோட்டா மற்றும் லெக்சஸ் (Lexus) உள்ளிட்ட பல்வேறு வாகன வகைகளையும் மீளப்பெற நடவடிக்கை எடுத்துள்ளது. டகாட்டா ஏர்பேக் உதிரிப்பாகங்களில் பயன்படுத்தப்படும் இரசாயன உந்துசக்தி காலப்போக்கில் சிதைவடைந்து, வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் நீண்டகால தாக்கத்தால் நிலையற்ற தன்மையை அடைவதே இந்தப் பிரச்சினைக்குக் காரணமாகக் கூறப்படுகின்றது.
அமெரிக்காவில் 6.7 கோடி வாகனங்கள்
டகாட்டா ஏர்பேக் விவகாரம் கடந்த பல ஆண்டுகளாக உலகளாவிய வாகனப் பாதுகாப்பு பிரச்சினையாக நீடித்து வருகின்றது. கடந்த ஒரு தசாப்தத்தில், உலகளவில் 10 கோடிக்கும் அதிகமான டகாட்டா ஏர்பேக் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீளப்பெறப்பட்டுள்ளன. அவற்றில் அமெரிக்காவில் மாத்திரம் சுமார் 6.7 கோடி வாகனங்கள் உள்ளடங்குகின்றன.

எவ்வாறாயினும், தற்போதைய மீளப்பெறல் அறிவிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு விபத்தும், காயமும் அல்லது ஏர்பேக் வெடிப்புச் சம்பவமும் பதிவாகவில்லை என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட வாகனங்களில் உள்ள ஏர்பேக் உதிரிப்பாகங்கள் புதியவற்றைக் கொண்டு மாற்றப்படும் என்றும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஏர்பேக் பிரச்சினைக்கான தீர்வு
ஹோண்டா நிறுவனத்தின் மீளப்பெறலில் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட ஹோண்டா அக்கோர்ட் (Accord), சிவிக் (Civic), சிஆர்-வி (CR-V), அகுரா ஐஎல்எக்ஸ் (ILX) மற்றும் அகுரா ஆர்டிஎக்ஸ் (RDX) ஆகிய வாகனங்கள் உள்ளடங்குகின்றன.
மேலும், டொயோட்டா நிறுவனத்தின் மீளப்பெறலில் குறிப்பிட்ட கொரோலா (Corolla), டன்ட்ரா (Tundra), செகோயா (Sequoia), 4ரன்னர் (4Runner) மற்றும் சில லெக்சஸ் வாகனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

டொயோட்டாவின் இந்த மீளப்பெறல் நடவடிக்கை உலகளவில் சுமார் 790,000 வாகனங்களைப் பாதிக்கின்றது. அவற்றில் 314,000 வாகனங்கள் அமெரிக்காவில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கான மாற்று ஏர்பேக் உதிரிப்பாகங்கள் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும் என டொயோட்டா நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.