திடீர் வெள்ளத்தால் லிந்துலை பாடசாலைக்கு விடுமுறை - மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
நுவரெலியா கல்வி லயத்திற்குட்பட்ட லிந்துலை - மெரயா தமிழ் மகா வித்தியாலயம், நேற்று(01.10.2026) பிற்பகல் ஏற்பட்ட கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதிகளில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பாடசாலை இன்று(02.10.2026) தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று(01) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளநீர், பாடசாலை வளாகம், வகுப்பறைகள், கணினி அறை மற்றும் பிரதான மண்டபம் உள்ளிட்ட பல பகுதிகளுக்குள் புகுந்துள்ளது.
இதன் காரணமாக பாடசாலை வளாகத்தில் சேறும் சகதியும் தேங்கியுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பாடசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மெரயா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் கிருஷ்ணராஜா தெரிவித்துள்ளார்.
நீர் மற்றும் சகதியால் சூழப்பட்ட பாடசாலை வளாகம்
இந்த விடயம் தொடர்பில் நுவரெலியா கல்வி வலய பணிப்பாளருடன் கலந்துரையாடிய பின்னரே பாடசாலையை மூடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாடசாலை வளாகம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய கிருமிநாசினி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், பாடசாலை வழமைக்குத் திரும்பும் என்றும் அதிபர் தெரிவித்துள்ளார். ம
லையகப் பகுதிகளில் அடிக்கடி நிலவும் கடுமையான சீரற்ற காலநிலையின்போது, பாடசாலை வளாகத்தில் மழைநீருடன் சேறும் சகதியும் தேங்குவதால் மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பாடசாலை வளாகத்தைச் சுற்றியுள்ள கால்வாய்களை முறையாக அமைத்து, மழைநீர் தேங்காத வகையில், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பாடசாலை அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


