முடிந்தால் தேர்தலை நடத்துங்கள் - அநுர அரசுக்கு சஜித் அணி பகிரங்க சவால்
அநுர அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது அவர்கள் நினைத்தால் அடுத்த வாரமே நாடாளுமன்றத்தில் பிரேரணையை நிறைவேற்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும்.
அரசுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்குகின்றோம், முடிந்தால் தேர்தலை நடத்துங்கள் இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க சவால் விடுத்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், அரசின் தற்போதைய செயற்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அரசின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை
மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வெகுவாகச் சிதைவடைந்துள்ளது அரசின் இயலாமையும் பலவீனமும் நாளுக்கு நாள் வெளிப்பட்டு வருகின்றன.

ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும், சகல கூட்டுறவுத் தேர்தல்களிலும் அரசு தோல்வியைத் தழுவியுள்ளது.
இதன் மூலம் மக்கள் அரசின் மீது கொண்டுள்ள வெறுப்பு தெளிவாகப் புலனாகின்றது.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசுக்கு ஆறு மாத கால அவகாசத்தை வழங்குகின்றோம். அரசிடம் தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருப்பதால், வரும் வாரமே ஒரு பிரேரணையை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்து சட்டச் சிக்கல்களை நீக்கித் தேர்தலை நடத்த முடியும். ஆனால், தேர்தலைச் சந்திக்க அரசுக்குத் துணிவில்லை.
நாட்டைச் சரியான முறையில் நிர்வகிக்க
இந்த அரசால் நாட்டைச் சரியான முறையில் நிர்வகிக்க முடியாது என்பது உறுதியாகிவிட்டது எம்மிடம் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த தரப்பினர் உள்ளனர்.

அதிகாரத்தை எம்மிடம் ஒப்படைத்தால் நாட்டைச் சிறந்த முறையில் கட்டியெழுப்புவோம்.
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், அதில் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெறுவது உறுதி" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.