துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பா..! உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற ஹிருணிகா
என் தந்தை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீர்மானம் தன்னிச்சையானது என்று உயர்நீதிமன்றம் இன்று(17) அறிவித்துள்ளது.
அத்துடன், குறித்த தீர்மானம் சட்டத்துக்குப் புறம்பானது என்றும் தீர்ப்பளித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இது தனிமனித வெற்றியல்ல, முழு நாட்டின் வெற்றி, உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும். கோட்டாபயவின் தவறான தீர்மானத்தை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமன்னிப்பு அதிகாரத்தை எதிர்கால ஜனாதிபதிகள் துஷ்பிரயோகப்படுத்தக் கூடாது என்பதற்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அத்துடன் துமிந்த சில்வா மரண தண்டனை விடயத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் செய்த அனைத்து விடயங்களிலும் தவறிவிட்டார் என்பதை மேலும் நிரூபித்துள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |