கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிரான போராட்டங்களின் போது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமில்லை என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போராட்டங்களை முன்னெடுக்க திட்டம்
நாட்டில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டித்து பல்வேறு தரப்பினரும் இன்றைய தினம் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் போராட்டங்களின் போது சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொழும்பிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜீ.சந்திரகுமார இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
பெருந்தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் எனவும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பினை கண்டித்து முன்னெடுக்கப்பட உள்ள போராட்டங்கள் காரணமாக கொழும்பு மற்றும் பிரதான நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.