இலங்கையின் பல பாகங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
இலங்கையின் பல பிரதேசங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதற்கான ‘ஆம்பர்’ மட்ட (Amber-level) அவசர ஆலோசனையையும் வெளியிட்டுள்ளது.
மிகப்பலத்த மழை
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை இடர்கள் தொடர்பான முன் எச்சரிக்கை மையத்தினால் இன்று (22) அதிகாலை 2.00 மணிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் நாளை (மே 23) அதிகாலை 2.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணம், சபரகமுவ மாகாணம், வடமேல் மாகாணம் என்பனவும் காலி மாவட்டமும் இவ்வாறு பலத்த மழையினால் பாதிக்கப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறித்த இடங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிகப்பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதாக அந்த எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பலத்த மழை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய சேதங்களை ஆகக்குறைந்த மட்டத்திற்குக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.