முல்லைத்தீவில் பதிவாகும் தொடர்ச்சியான மழைவீழ்ச்சியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (Video)
முல்லைத்தீவில் தொடர்ச்சியான மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அதன்படி முல்லைத்தீவு கரைதுறைப்பற்று,ஒட்டுசுட்டான்,மாந்தை கிழக்கு ஆகிய பிரதேசங்களில் வெள்ளப்பாதிப்புக்களை மக்கள் எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மக்களின் வீடுகளும் வயல் நிலங்களும் வெள்ளநீரினால் மூழ்கியுள்ளதுடன் பண்டாரவன்னி கிராமத்திற்கு செல்லும் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் வெளியேற முடியாத நிலைக்குள்ளானதாக குறிப்பிடப்படுகிறது.
மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலை தகவலின் படி ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 115 குடும்பங்களை சேர்ந்த 379 பேரும்,கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 28 குடும்பங்களை சேர்ந்த 87 பேரும் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 39 குடும்பங்களை சேர்ந்த 107 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று மழைவீழ்ச்சி சற்று குறைவாக உள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வழங்கும் நடவடிக்கையில் அரச திணைக்களங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வவுனிக்குள பிரதேசத்தில் 208 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், ஜயன்கன்குளம் பிரதேசத்தில் 179 மி.மீ.மழைவீழ்ச்சியும், அம்பலப்பெருமாள்குளத்தில்173 மி.மீ.மழைவீழ்ச்சியும், கல்விளான்குளத்தில் 200 மி.மீ மழைவீழ்ச்சியும்,மல்லாவிகுளத்தில் 168 மி.மீ மழைவீழ்ச்சியும்,பனங்காமம் பிரதேசத்தில் 225 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














