தென்னிலங்கையை கதி கலங்க வைக்கும் அநுர : மக்களுக்காக தொடரும் அதிரடிகள்
சமகால அரசாங்கம் மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் அரசியல் பொறுப்புக்கூறல் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொய்யான அரசாங்கம் ஒன்று செயற்படுவதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளும் அதனை பெரிதாக்கி வருகின்றன.
ஊழல் மற்றும் முறைகேடு
இவ்வாறான நிலையில் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்கு உள்ளான முக்கிய அரசியல் பிரமுகர்களை குறி வைத்து கைது நடவடிக்கையை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை நீண்டகால நிர்வாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் உள்ள உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டுவதாக குறிப்பிடப்படுகிறது.
கடந்த காலத்தில் நடந்ததாக கூறப்படும் ஊழல் மோசடிகள், கொலைகள் மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் அம்பலப்படுத்தப்படுவதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.
காத்திரமான நடவடிக்கை
எனினும் ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலத்தை நெருங்கும் நிலையிலும், அது தொடர்பான காத்திரமான நடவடிக்கைகளை இன்னும் எடுக்கவில்லை என்பது குறித்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.
இது தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயலாக மாறியுள்ள நிலையில், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது பிரதிபலித்திருந்தது.
நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் உள்ள அரசாங்கம், உள்ளூராட்சி தேர்தலின் போது கணிசமான வாக்குச் சரிவிற்கு உள்ளானது. அநுர அரசின் மீது மக்கள் கொண்ட வெறுப்பின் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆட்சிகளின் போது அமைச்சரவை அந்தஸ்து அமைச்சு பதவிகளை வகித்தவர்களை இலக்கு வைத்து கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசின் மீதான நம்பிக்கை
இதன்மூலம் மக்கள் மத்தியில் இழந்துள்ள அரசின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையை தேசிய மக்கள் சக்தி கொண்டுள்ளது.
அதற்கமைய முன்னாள் அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல - போலி மருந்து ஊழல் குற்றச்சாட்டிலும், பிரசன்ன ரணவீர - அரச காணி துஷ்பிரயோக குற்றச்சாட்டிலும், மேர்வின் சில்வா - காணி ஒப்பந்த மோசடி தொடர்பிலும், மகிந்தானந்த அலுத்கமகே - தரமற்ற உர இறக்குமதி தொடர்பிலும், சாமர சம்பத் தசநாயக்க - நிதி துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பிலும், எஸ்.எம். ரஞ்சித் - எரிபொருள் கொடுப்பனவு துஷ்பிரயோகம், துமிந்த திசாநாயக்க - சட்டவிரோத ஆயுதத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அரசியல்வாதிகள்
பல்வேறு குற்றச்சாட்டுகளில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், தான் உட்பட முன்னாள் அரசியல்வாதிகள் 40 பேரை கைது செய்வதற்கான நடவடிக்கையை சமகால அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சரான விமல் வீரவன்ச குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

ஏ. ஆர் ரஹ்மான் பானியில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிமோகன்- வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை Manithan
