இஸ்ரேலுடன் போர் நிறுத்தப்பேச்சுக்கு அழைப்பு விடுத்துள்ள ஹிஸ்புல்லாஹ்
இஸ்ரேலியப் படைகள் லெபனானில் புதிய ஊடுருவல்களை மேற்கொண்டுள்ள நிலையில், போர் நிறுத்தத்துக்கான அழைப்பை ஹிஸ்புல்லாஹ் அமைப்பு விடுத்துள்ளது.
இந்தநிலையில், தமது தாக்குதலில், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாஹ் குழுவைச் சேர்ந்த மற்றொரு மூத்த அதிகாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதன் பின்னர், தொடர்ச்சியாக அடுத்தடுத்த கட்டங்களின் தலைவர்களும், இஸ்ரேலிய படையினரால் குறிவைக்கப்பட்டனர்.
முக்கியஸ்தர்களின் மரணங்கள்
இதில் நஸ்ரல்லாவுக்குப் பின்னர் ஹிஸ்புல்லாஹ்வின் உயர்மட்ட அதிகாரியான ஹசேம் சஃபிதீனும், இஸ்ரேலின் வான் வழித்தாக்குதலில் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
எனவே, அந்த அமைப்பின் சார்பில் முடிவுகளை எடுக்க எவரும் இல்லை மற்றும் செயல்பட யாரும் இல்லை என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், ஒரு தொலைக்காட்சி உரையில், ஹிஸ்புல்லாஹ்வின் துணைத் தலைவர் நைம் காசிம், ஒரு போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.
திடீர் அறிவிப்பு
முன்னதாக, காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போரின் போது பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகப் போராடுவதாக கூறிவந்த ஹிஸ்புல்லாஹ், அங்கு போர்நிறுத்தம் இல்லாமல், தாம் போர் நிறுத்தத்துக்கு உடன்பட போவதில்லை என்று கூறி வந்தது.
இவ்வாறிருக்கையில், திடீரென இந்த அறிவிப்பை ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலில் இருந்து வலி நிறைந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டாலும் ஹிஸ்புல்லாஹ்வின் திறன்கள் குறைவடையவில்லை என்று காசிம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, லெபனானில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இதுவரை சிறுவர்கள் உட்பட்ட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |