அடைமழை, பலத்த காற்று: சாமிமலையில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிப்பு
நுவரெலியா மாவட்டம் - சாமிமலை, ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் அண்மையில் பெய்துவரும் அடைமழை மற்றும் பலத்த காற்றினால் 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த லயன் குடியிருப்பில் உள்ள சில வீடுகளுக்கு அருகாமையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பலத்த காற்றின் காரணமாக வீடுகளின் கூரைத் தகரங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
சேதமடைந்த கூரைகள்
அத்துடன், இந்தக் குடியிருப்பில் வசிக்கும் 13 பாடசாலை மாணவர்களும், தோட்டத்தில் தொழில் புரியும் தொழிலாளர்களும் தொடர்ச்சியாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மழை தொடர்ச்சியாக பெய்துவரும் நிலையில், சேதமடைந்த கூரைகள் ஊடாக மழைநீர் வீடுகளுக்குள் கசிவதால், தங்களது பிள்ளைகளுடன் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் இதனால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தங்களது வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் தோட்ட நிர்வாகத்திற்கு பல தடவைகள் அறிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும், இதுவரை தங்களுக்கு நிரந்தரமான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தொழிலாளர்கள் இடையேயான பிரிவினை
கூரைத் தகரங்கள் சேதமடைந்த குடும்பங்களுக்கு உடனடியாக புதிய கூரைத் தகரங்களை வழங்குவதுடன், மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த பல வருடங்களாக ஸ்டொக்ஹோம் தோட்ட நிர்வாகம் மற்றும் சில அதிகாரிகளினால் தொழிலாளர்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படுத்தப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தோட்டத்தில் தொழில் புரிபவர்கள் மற்றும் தற்போது தொழில் வாய்ப்பு இல்லாதவர்கள் என பிரிக்கப்பட்டுவதுடன் நிர்வாகத்திற்கு சார்பானவர்கள் மற்றும் சார்பற்றவர்கள் என தொழிலாளர்களிடையே பிரிவினை ஏற்படுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக சில தொழிலாளர்கள் தொழிலில் இருந்து நீக்கப்பட்டதாகவும், மேலும் சில தொழிலாளர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தோட்ட நிர்வாகத்தின் தரப்பிலான பதில் இதுவரை கிடைக்கவில்லை.
ஹோர்முஸ் நீரிணை திறந்தால் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட ட்ரம்ப் தயார்..! வெளியான அதிரடி அறிவிப்பு
அதிகாரிகளால் அச்சுறுத்தல்கள்
அண்மைய சீரற்ற காலநிலையினால் வீடுகளின் கூரைத் தகரங்கள் சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கூரைத் தகரங்களை வழங்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது, தோட்டத்தில் தற்போது தொழில் புரியும் குடும்பங்களுக்கு தலா 8 பழைய கூரைத் தகரங்கள் வழங்கப்பட்டதாகவும் தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற குடும்பங்களுக்கு கூரைத் தகரங்களை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோது, தோட்ட நலன்புரி மற்றும் வெளிக்கள அதிகாரிகளால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும், பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டு தங்களுக்கு அழுத்தங்கள் ஏற்படுத்தப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனடிப்படையில் தோட்ட நிர்வாகத்தினரை உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள தங்களது குடியிருப்புகள் மேலும் சேதமடைவதற்கு முன்னர், அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை நேரில் பார்வையிட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.