டெங்கு தொற்று அதிகரிக்க இதுவே காரணம்: சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்
யாழ். மாவட்டத்தில் தொடரும் அசாதாரணமான மழை வீழ்ச்சியே டெங்கு தொற்றின் தாக்கம் அதிகரிப்பதற்கு காரணம் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், இன்றைய தினம் (28.12.2023) டெங்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், சிறியளவு நீர் தேங்கி உள்ள இடங்களிலும் டெங்கு நுளம்பு பெருகும் நிலை காணப்படுவதால் கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ளது.
நோயாளிகளை கண்காணிப்பதில் பிரச்சினைகள்
டெங்கு தாக்கத்துக்குள்ளாகும் நோயாளியை சீராக கண்காணித்து வந்தால் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
ஆனால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதால் நோயாளிகளை கண்காணிப்பதில் பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
இதனால், மரண வீதம் அதிகரித்துள்ளதுடன் குறிப்பாக டிசம்பர் மாதத்தில் மட்டும் டெங்கு தொற்றால் நால்வர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் நான்கு பிரதேச வைத்தியசாலைகளிலும் இதற்கான சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கான அனைத்து வசதிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உதவியாளர்கள் பற்றாக்குறை
அத்துடன், விசேட விழிப்பூட்டல் மக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதோடு யாழ். போதனா வைத்தியசாலையில் இரு விடுதிகள் இதற்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனை கண்காணிப்பதற்காக 60 வைத்திய மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வைத்தியசாலைகளில் உதவியாளர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. பயிற்சிபெற்ற 53 பணியாளர்களை நிரந்தரமாக்குவதனூடாக அதனை நிவர்த்தி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |