இலங்கையில் அடுத்த 36 மணிநேரத்தில் கடும் மழை: வெளியான எச்சரிக்கை அறிவிப்பு
இலங்கையின் பல பகுதிகளில் அடுத்த 36 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.

இதற்கிடையில், நவம்பர் 11 முதல் 15 வரை வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்தப் பிராந்தியம் தொடர்பாக பல நாள் கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கும் கடற்படையினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் வானிலை அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.