சீரற்ற காலநிலையால் நுவரெலியாவின் பல பகுதிகள் பாதிப்பு - மக்கள் தவிப்பு
நுவரெலியா (Nuwara Eliya) - கந்தப்பளை பகுதிகளில் நிலவிய கடும் காற்றுடனான காலநிலை காரணமாக பல வீடுகள் சேதமடைந்து மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வீசிய பலத்த காற்றினால் நேற்றிரவு (22) இந்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, அதிகமான வீடுகளில் கூரையில் பொருத்தப்பட்டிருந்த தகரங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் வீடுகளும் சேதமடைந்துள்ளன.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இந்நிலையில், நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் பல பிரதான வீதியோரங்களில் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த பதாதைகளும் பெயர்ப்பலகைகளும் உடைந்து வீழ்ந்துள்ளன.
அதேவேளை, நுவரெலியா - பதுளை (Badulla) பிரதான வீதியில் இன்று அதிகாலை நுவரெலியா மத்திய பொதுசந்தைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அப்பகுதியினூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டுள்ளது.
மேலும், தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல், மண்சரிவு அபாயம் மற்றும் அதிக பனிமூட்டம் காரணமாக வாகனங்களை மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹட்டன் (Hatton) - நுவரெலியா மற்றும் வெலிமட - கண்டி வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்தோடு வாகன விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நோர்ட்டன் பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்ட்டன் மீட்போர்ட் பகுதியில் வீடு ஒன்றின் மீது பாறிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் வீசிய கடும் காற்றின் காரணமாகவே இந்த சேதம் இடம்பெற்றுள்ளது.
மரம் முறிந்து விழும் பொழுது பெண் ஒருவர் மாத்திரம் வீட்டில் இருந்துள்ளதாகவும் குறித்த பெண் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி : சுந்தரலிங்கம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |