காஸாவில் சிறுவர்கள் உட்பட பலர் உயிரைப் பறித்த கோர அனர்த்தம்
காஸாவில் பெய்த கனமழையால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மணல் மேடு சரிந்து வீழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய காஸாவின் டெய்ர் அல்-பலாஹ் பகுதியில் உள்ள அர்-ரிபாத் இடம்பெயர்ந்தோர் முகாம் பகுதியில் பெய்த மழையைத் தொடர்ந்து மணல் கரை இடிந்து கூடாரங்கள் மீது வீழ்ந்தது.
இதில் மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க போதிய இயந்திரங்கள் இல்லாததால், பொதுமக்கள் வெறும் கைகளாலும் கிடைத்த கருவிகளைக் கொண்டும் மணலை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
106,000 பேர் பாதிப்பு
இந்தச் சம்பவத்தில் எட்டு வயது சிறுவன், ஆறு வயது சிறுமி மற்றும் அவர்களது ஐந்து மாத கர்ப்பிணித் தாயான 36 வயதான பெண் ஆகியோர் உயிரிழந்தனர். குடும்பத்தின் தந்தை மட்டும் உயிர் தப்பியுள்ளார்.

அத்துடன் மற்றுமொரு குடும்பத்தில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது தாயும் சகோதரரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் யூனிசெப் தகவலின்படி, கனமழையால் காசாவில் சுமார் 106,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நவம்பர் 8ஆம் திகதி வரை 26,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
இந்த நிலையில்,சுமார் 1.4 மில்லியன் மக்கள் கூடாரங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்து வருகின்றனர். காஸாவின் வடிகால் கட்டமைப்புகள், வீதிகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்புகள் போரினால் கடுமையாக சேதமடைந்துள்ளதால் வெள்ளப் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதிலும் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதிலும் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.