அடிப்படை உரிமைகளுக்கு ஆபத்தா..! அரசின் புதிய சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றில் சூடுபிடிக்கும் வாதம்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் புதிய சட்ட மூலம் அரசியல் அமைப்பில் கூறப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறும் ஒரு சட்ட மூலம் என உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தன்னுடைய வாதத்தை முன்வைத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நேற்றுமுன்தினம்(19.10.2026) உயர் நீதிமன்றத்தில் வடக்கு மாகாணம் சார்பில் புதிய பயங்கரவாத தடைச் சட்ட மூலத்திற்கு எதிராக சட்டத்தரணி சிவ புண்ணியம் அபிலாஷ் சார்பில் சட்டத்தரணி ஜனனி அய்யாதுரை அனுசரணையுடன் முன்னிலையாகிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ மயமாக்கலை ஏற்படுத்தும் திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனது சமர்ப்பணத்தில் 40 வருட கால பழமையான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
இவ்வாறான ஒரு நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை கொண்டு வந்தமை அதனைவிட மோசமான ஒரு சட்ட வரைபாக பார்க்கிறேன். புதிய பயங்கரவாத தடைச் சட்ட மூலத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என்பது தொடர்பில் தெளிவான விளக்கங்களோ வரையரையோ காணப்படவில்லை.

இலங்கை அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறும் பல சரத்துக்கள் புகுத்தப்பட்டுள்ளமை ஆபத்தான விடயமாக உள்ளது.
பொலிஸாரிடம் இருக்கின்ற அதிகாரங்கள் பல புதிய சட்டமூலத்தில் இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளுக்கு வழங்கப்படுவது அசாதாரண சூழலை ஏற்படுத்துவதோடு இராணுவ மயமாக்கலை ஏற்படுத்தும் திட்டம்.
ஏற்கனவே இராணுவத்தினர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இலங்கையில் சுமத்தப்பட்டுள்ள நிலையில், புதிய சட்டமூலத்தின் மூலம் அதிகார துஸ்பிரியோகங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தனது சமர்ப்பணத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.