பேருந்துகளில் பயணிப்போருக்கு எச்சரிக்கை - மர்ம நபரால் இளைஞனுக்கு நேர்ந்த கதி
கொழும்பில் இருந்து கேகாலையிலுள்ள தனது வீட்டிற்கு சென்ற இளைஞன் மர்ம நபர் கொடுத்த பிஸ்கட்டினால் கையடக்க தொலைபேசியை இழந்துள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொடுத்த பிஸ்கட்டை சாப்பிட்டு மயக்கமடைந்த நிலையில், 5 லட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் ரக கையடக்க தொலைபேசி காணாமல் போயுள்ளது.
இந்த நிலையில் சுயநினைவின்றி இருந்த இளைஞன் நேற்று முன்தினம் இரவு கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞனுக்கு நேர்ந்த கதி
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

இளைஞனின் தந்தை 2024 ஆம் ஆண்டு ரஷ்யாவிற்கு வேலைக்குச் சென்றிருந்தபோது, சுமார் மூன்று மாதங்களின் பின்னர் போரில் காணாமல் போயுள்ளார்.
பின்னர் மூத்த சகோதரர்கள் இருவரும் இரண்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றுள்ள நிலையில், வீட்டில் 18 வயது இளைஞனும் தாயாரும் மட்டுமே இருந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் இளைஞன் வீட்டிற்குச் செல்வதற்காக இரவு 7.15 மணியளவில் கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
மாத்தளை நோக்கிப் பயணிக்கவிருந்த பேருந்தொன்றில் ஏறி இளைஞன் அமர்ந்திருந்தபோது, அவருக்கு அருகிலிருந்த ஆசனத்தில் அடையாளம் தெரியாத நப ஒருவர் வந்து அமர்ந்துள்ளார்.
பயணிகளுக்கு எச்சரிக்கை
பேருந்து இரவு 7.30 மணிக்குக் கொழும்பு கோட்டையில் இருந்து மாத்தளை நோக்கிப் புறப்பட்டு சென்றுகொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் இளைஞனுக்கு பிஸ்கட் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்ற இளைஞனால் கேகாலை சந்தியில் இறங்க முடியாமல் போயுள்ளது.
கண்டி நகரை நோக்கிப் பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது, பேருந்தின் நடத்துனர் மயக்கத்தில் இருந்த இளைஞனை எழுப்பி விபரங்களைக் கேட்டுள்ளார்.
இதன்போது தான் ஏமாற்றப்பட்ட பெறுமதியான கையடக்க தொலைபேசி திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.