அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நாடாளுமன்றத்தில் நேற்று கடும் வாதப்பிரதிவாதங்கள்
மத்திய வங்கியின் 2020ஆம் ஆண்டு அறிக்கை தொடர்பான முன்மொழியப்பட்ட விவாதத்தை யார் நகர்த்த வேண்டும் என்பது குறித்து அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நேற்று நாடாளுமன்றத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் அனுர குமார திசாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார விவாதத்திற்கு கோரிய போது விவாதத்தை நகர்த்துவதற்கான வாய்ப்பு அவருக்கு எவ்வாறு வழங்கப்பட்டது என்று அனுர குமார கேள்வி எழுப்பினார்.
கடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் விவாதத்திற்கு தாமே கோரிக்கை விடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விஷயத்தை ஆராய்வதாக தெரிவித்தார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் விடயங்களை எழுதும் போது ஏதேனும் தவறு நடந்திருக்கிறதா என்று தாம் ஆராய்வதாகவும் அவர் கூறினார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்கவுடன் இந்த விடயத்தில் உடன்படுவதாக தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் பிரசன்ன குணவர்தன, சஜித் பிரேமதாச திஸாநாயக்கவின் கைப்பாவையாக மாறிவிட்டார் என்று கூறினார்.
எனினும் இதன்போது பேசிய சஜித் பிரேமதாச, தாம் முன்னைய அரசாங்கங்களின் கைப்பாவைகளாக இருந்த கடந்த கால எதிர்க்கட்சித் தலைவர்களைப் போன்றவர் அல்லர் எனக் கூறினார்.
வாதத்தில் இணைந்த சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன, அனுர குமார திசாநாயக்க ஒரு விவாதத்திற்கு மட்டுமே கோரினார், ஆனால் அவர் அதை நகர்த்த விரும்புவதாகக் குறிப்பிடவில்லை.
எனவே பேராசிரியர் பண்டார விவாதத்தை நகர்த்துவதில் தவறில்லை. ஆகவே சபையை சீர்குலைக்கும் எதிர்க்கட்சியின் முயற்சிக்கு இது ஒரு தெளிவான எடுத்துக் காட்டு என்று கூறினார்.
இதன் பின்னரும் வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்தன, பின்னர் சபாநாயகர் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த அமர்வை நிறுத்தி வைத்தார்.
இதன்போது அனுரகுமார திசநாயக்க அடுத்த மாதம் விவாதத்தை நகர்த்த அனுமதிக்கப்படுவார் என்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.