நாளை முதல் சகல கடமைகளில் இருந்தும் விலகும் துணை மருத்துவ சேவையினர்
நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக நாளையும் நாளை மறுதினமும் அனைத்து கடமைகளில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக துணை மருத்துவ சேவை ஒருங்கிணைந்த முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எட்டு துணை மருத்துவ சேவைகள் தொழிற்சங்கங்கள்
பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப சுகாதார பெண் ஊழியர்கள் உட்பட துணை மருத்துவ சேவையுடன் சம்பந்தப்பட்ட 8 தொழிற்சங்கங்கள் இரண்டு நாட்களுக்கு கடமைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளன.
வெள்ளிக்கிழமைகளில் சுகாதார சேவை ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என அரசாங்கம் அண்மையில் அறிவித்தது. இதற்காக மாவட்டங்களில் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமைக்குள் எரிபொருள் கிடைக்கவில்லை.
இதனால், எரிபொருள் இருக்கும் ஏனைய எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
தடுப்பூசி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும்
இந்த நிலைமை காரணமாக 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் அனைத்து கடமைகளில் இருந்து விலக நாங்கள் தீர்மானித்துள்ளோம். தடுப்பூசி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் இந்த தினங்களில் பாதிக்கப்படும்.
வேறு அரச ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணிப்புரிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும் சுகாதார ஊழியர்கள் அப்படி வீடுகளில் இருந்து பணியாற்றுவது சிரமமான விடயம்.
நிலவும் நிலைமைக்கு அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்காது போனால், எதிர்வரும் திங்கள் கிழமையில் இருந்து நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்க போவதாகவும் உபுல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.