நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுப்பட்ட சுகாதார ஊழியர்கள்(Video)
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து போராட்டம் ஒன்று இன்று(25) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் முன் ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் முயற்சி
நேற்றைய தினம் (24) கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அங்கு சமூகமளித்திருந்த கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந.சரவணபவன் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சுகாதார ஊழியர்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ளவர்கள் மிக மோசமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி அவர்களை அவமதிக்கும வகையில் நடந்துகொண்டுள்ளனர்.
மது போதையில் இருப்பவர்கள் தொழில் அடையாள அட்டையை பரிசோதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான சம்பவங்களை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை
சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் பொருட்டு வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்திற்கு அமைவாக எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும்.
சுகாதார ஊழியர்களுக்கு என கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை நிறுத்தி கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிலையத்திற்கு மாற்றுமாரும், சுகாதார பணிப்பாளர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையிலிருந்து பேரணியாக மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.
மேலதிக தகவல்-சுழியான்
மன்னார்
சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த கோரியும், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்று (25) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
அண்மைக் காலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டித்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
செய்தி-ஆஷிக்
வவுனியா
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்கப்பட்டமையை கண்டித்து இன்று (25) பிற்பகல் 12.00 மணி தொடக்கம் 1.00மணி வரையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தினர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஊழியர்கள், மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், 'உயிர்காக்கும் தொழிலுக்கே உயிராபத்தா', 'எரிபொருளினால் தாக்கப்படும் சுகாதார ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்கு', 'கிளிநொச்சி பிராந்திய பணிப்பாளர் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றோம்', போன்ற வசனங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி-ஷான், திலீபன்
கிளிநொச்சி
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்கப்பட்டமையைக்கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை ஊழியர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை ஊழியர்கள் ஒரு மணிநேர பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு தாக்கப்பட்ட குற்றவாளியினைகைதுசெய்ய கோரியும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை முன்னால் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.