இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை தாமதத்தால் 15,600 பேருக்கு நேர்ந்துள்ள துயரம்!
இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகள் தாமதத்தால் 15,600 சந்தேக நபர்கள் சிறையில் வாடுவதாக தெரியவந்துள்ளது.
2026 ஜனவரி 31 ஆம் திகதி வரையுமான காலப்பகுதியில் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாததால் 15,674 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.
சிறையில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள்
இவர்களில் 728 சந்தேக நபர்கள் 12 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதாகவும் 3706 பேர் ஆறு மாதம் தொடக்கம் 12 மாதங்களாகவும் 4904 பேர் 3 தொடக்கம் 6 மாதகங்ளும் 6336 பேர் மூன்று மாதங்களுக்கு அதிகமாக இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகள் தாமதத்தால் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தில் 121 இரசாயனப் பகுப்பாய்வாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அதனாலே அறிக்கைகள் தாமதமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்காரவிடம் வினவிய போது, தாங்கள் ஆட்சியை பொறுப்பேற்கும் போது அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் 121 இரசாயனப் பகுப்பாய்வாளர்களுக்கான வெற்றிடங்கள் இருந்தன.

அதுவே மேற் குறிப்பிட்ட காரணங்களுக்கு ஏதுவாக இருக்கிறது. மேலும் போதை பொருள் தொடர்பில் கைது செய்யப்படுவோர் அதிகரித்துள்ளதால் வழக்குகளை முன்னெடுப்பதிலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கும் நடைமுறையில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் அளவு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.அது தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை கட்டாயமாகும் என குறிப்பிட்டுள்ளார்.