நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலை: ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் விளக்கம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக நாடு ஒரு முக்கியமான தருணத்தை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், டிசம்பர் முதல் கணக்காய்வாளர் நாயகம் பதவி நிரப்பப்படாமல் இருக்கிறது.
அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள விடயம்
கணக்காய்வாளர் நாயகம் இல்லாதது ஒரு சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக நிதிக்குழுவின் தலைவர் என்ற வகையில் டாக்டர் ஹர்ஷ டி சில்வா, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரசியலமைப்பின் 148வது பிரிவின்படி, பொது நிதிகள் மீது பாராளுமன்றம் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. அதை செயல்படுத்துவதற்கு ஒரு சுயாதீன தணிக்கை பொறிமுறை அவசியம்.

மேலும் அரசியலமைப்பின் 154வது பிரிவின்படி, கணக்காய்வாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அவர் அரச நிறுவனங்களில் காணக்காய்வு செய்து அதன் விபரங்களை நாடாளுமன்றத்திற்கு அறிக்கை செய்ய வேண்டும என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கணக்காய்வாளர் நாயகம் பதவி நிரப்பப்படாமல் இருப்பதால் மேற் குறிப்பிட்ட அரசியலமைப்புச் செயல்முறை மீறப்பட்டுள்ளதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.