ஏப்ரல் மாதம் புதிய டிஜிட்டல் கொள்கை: கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள்
சிறுவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான புதிய டிஜிட்டல் கொள்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மொனராகலை ரோயல் கல்லூரியில் நடைபெற்ற கல்வி அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி நிலுவையிலுள்ள ஆசிரியர் ஆட்சேர்ப்பு பரீட்சைகள் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அமைவாக நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
நள்ளிரவில் பற்றி எரிந்த கார் - கொழும்பை உலுக்கிய இரட்டைக்கொலையில் சிஐடியினருக்கு கிடைத்த முக்கிய ஆதாரம்
நீதிமன்ற அனுமதி
அத்துடன் பட்டதாரிகளின் மேன்முறையீடுகளைக் கருத்திற்கொண்டு, தகுதிகாண் திகதியை திருத்துவதற்கு நீதிமன்ற அனுமதி கோரப்பட்டுள்ளது. இது ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கணிசமான தீர்வை வழங்கும்.
மொனராகலை மாவட்டத்திலுள்ள 132 பாடசாலைகளுக்கு Smart Boards (ஸ்மார்ட் போர்டுகள்) வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 பாடசாலைகளுக்கு இவை பிரதமரால் கையளிக்கப்பட்டன.
தரம் 1 மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல் முறைகளை பிரதமர் நேரில் அவதானித்தார்.

பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பு
கும்புக்கணை ஸ்ரீ சண்முகம் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் மதுருகெட்டிய மகா வித்தியாலயம் ஆகியவற்றிற்கு அவர் விஜயம் செய்தார்.
உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதை அடுத்து, மதுருகெட்டிய மகா வித்தியாலயம் இனி 'மொனராகலை தர்மராஜ மகா வித்தியாலயம்' என அழைக்கப்படும். பிரிவெனா ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், பிரிவெனா கல்வியை மேம்படுத்தவும் கல்வி அமைச்சின் குழுவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மையைப் பேணுமாறும், தரவுகளின் அடிப்படையில் விரைவான முடிவுகளை எடுக்குமாறும் அதிகாரிகளைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |