கனடா-இந்தியா உறவில் தொடர் பதற்றம்: மீண்டும் குற்றம் சுமத்திய ஜஸ்டின் ட்ரூடோ
காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான விடயத்தில் மீண்டும் இந்தியாவை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி உள்ளார்.
கனடா தலைநகர் ஒட்டாவாவில் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இதன் பின்னர் இருவரும் கூட்டாக நடத்திய பத்திரிகையாளர்களை சந்திப்பில், இந்தியா-கனடா உறவு குறித்து ஜஸ்டின் ட்ரூடோவிடம் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
குற்றச்சாட்டின் பின்னணி
இதற்கு பதிலளித்த கனடா பிரதமர், ‛‛ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுகளை நாங்கள் சில வாரங்களுக்கு முன்பே இந்தியாவிடம் கூறினோம்.
நான் கடந்த திங்கட்கிழமை தொடர்பில் பேசினேன். அதனை இந்தியா மறுத்துள்ளது.
இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக சேர்ந்து செயல்பட தயாராக இருக்கிறோம். அவர்கள் எங்களுடன் சேர்ந்து செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்.
இவ்வாறு செயற்படுவதன் மூலம் இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள தீவிரமான விடயத்தை கண்டுபிடிக்க முடியும்'' என தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக செயற்படும் சில அமைப்புகளை அந்நாடு தடை செய்து வருகிறது. அந்த வகையில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாக காலிஸ்தான் அமைப்பு காணப்படுகிறது. இதன் தலைவராக ஹர்தீப் சிங் நிஜ்ஜார் செயல்பட்டு வந்தார்.
பகிரங்க குற்றச்சாட்டு
இந்தியாவில் வாழும் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி இந்த படையை சேர்ந்தவர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.
மேலும் கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இது தொடர்பில் கடந்த வாரம் கனேடிய நாடாளுமன்றில், ''காரணம் இதுதான் அதாவது ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளது'' என பகிரங்க குற்றச்சாட்டொன்றை கனடா பிரதமர் முன்வைத்திருந்தார்.
மேலும், இந்தியாவின் முகவர்கள் மூலம் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என நம்பகமான தகவல்கள் வந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் முகமாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை கனடா நிறுத்த வேண்டும் என இந்திய தரப்புக்களில் கண்டனங்கள் உருவாகியிருந்தன.
இந்திய - கனடா உறவுகளில் விரிசல்
இதன் காரணமாக இந்திய - கனடா உறவுகளில் விரிசல் நிலை ஏற்பட்டதோடு, கனடா இந்திய தூதரை வெளியேற்ற, இந்தியா கனடா தூதரை வெளியேற்றியது.
மேலும் கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கான விசா வழங்கும் நடைமுறையை இந்தியா நிறுத்துவதாக அறிவித்திருந்தது.
அத்தோடு, கனடா வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் இந்தியா அறிவிப்பு ஒன்றின் மூலம் பதிலடி கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.