உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பில் முடிவை மாற்றிக்கொண்ட மைத்திரி
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், உள்ளக விசாரணைக்கு சர்வதேச தொழிநுட்ப உதவி இருந்தால் போதுமே தவிர சர்வதேச விசாரணை அவசியமில்லை என ஐ.நா. பிரதிநிதியிடம் தான் கூறிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (22.09.2023) உயிர்த்த ஞாயிறு தினக் குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் இந்தளவுக்கு விவாதம் நடத்தப்பட்ட விடயம் வேறு எதுவும் இருக்காது. இதில் நானே இலக்காக இருக்கின்றேன். தாக்குதல் நடந்த நாள் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்துத் தெரிவித்துள்ளேன்.
பாதுகாப்பு சபை
அந்த நேரத்தில் புலனாய்வுப் பிரிவோ, பாதுகாப்புத் தரப்பினரோ எனக்கு அறிவிக்கவில்லை. இதனை மக்கள் நம்பவில்லை. நான் தெரிந்து கொண்டே வெளிநாட்டுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கின்றனர்.
இதன்படி நானே பொறுப்புக்கூற வேண்டியவர் என்றும் கூறுகின்றனர். 7 நீதியரசர்களை கொண்ட வழக்கு விசாரணையில் எனக்குத் தகவல்கள் அறிவிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை நான் சபையில் சமர்ப்பிக்கின்றேன். நான் 2016ஆம் ஆண்டு முதல் எனக்குக் கிடைத்த தகவல்கள் தொடர்பில் பாதுகாப்புச் சபையில் கூறியுள்ளேன்.
சர்வதேச நாடுகளில் ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல்களை நடத்தும்போது இங்கு இவ்வாறு நடக்க இடமளிக்கக் கூடாது என்று நான் அடிக்கடி பாதுகாப்பு சபையில் கூறியுள்ளேன்.
சஹ்ரானைக் கைது செய்யாமை தொடர்பில் கூறுகின்றனர். அவரைக் கைது செய்யவென அதிகாரிகள் இருக்கின்றனர். அதற்கு ஜனாதிபதி போகப் போவதில்லையே.
நான் 2019 ஜனவரியில் நடந்த பாதுகாப்புச் சபையில் சஹ்ரானைக் கைது செய்யாது இருக்கின்றமை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளேன்.
சர்தேச விசாரணை
அத்துடன் ஒரு வருடமே பொலிஸ் அமைச்சு இருந்தது. கிடைத்து 6 மாதத்திலேயே குண்டு வெடித்தது. இவ்வாறு குண்டு வெடிக்க முன்னர் நான்கு வருடங்கள் என்னிடம் பொலிஸ் துறை அமைச்சு இருக்கவில்லை.
சம்பவம் நடந்த பின்னர் சஹ்ரானுடன் தொடர்புடைய முழு அமைப்புகளையும் இல்லாமல் செய்துவிட்டேன்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், அதனை அடிப்படையாகக்கொண்டு யுத்தம் தொடர்பிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சர்வதேச விசாரணை கோரலாம்.
எனவே, சர்வதேச விசாரணை அவசியமில்லை என ஐ.நா பிரதிநிதியிடம் கூறிவிட்டேன். உள்ளக விசாரணைக்குச் சர்வதேச ரீதியில் தொழிநுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் ஐ.நாவிடமும் நாங்கள் தொழிநுட்ப உதவிகளை வழங்குமாறு கேட்கின்றோம். அத்துடன் சிலர் என் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
இங்கு விவாதங்களை நடத்தி இன்னும் பணத்தைச் செலவழிக்கத் தேவையில்லை. என் மீது குற்றச்சாட்டை முன்வைத்தவர்களுக்குப் பதிலளிக்கின்றேன். சரத் பொன்சேகாவுக்குப் பீல்ட் மார்ஷல் பதவியை நானே வழங்கினேன்.
நான் வழங்கியது வேண்டாம் என்றால் அந்தப் பதவியை இல்லாமல் செய்துகொள்ள வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்து அவருக்குப் பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கினேன்.
இந்நிலையில், சில இராணுவ அதிகாரிகள் என்னிடம் அவர் பற்றி கூறுவர். யுத்தம் செய்வதாகக் கூறிக் கொண்டு கிளிநொச்சி வரும் அவர் கொங்கிறீட் பங்கருக்குள் இருப்பார் எனவும், அவர் யுத்தக் களத்துக்குச் செல்லவில்லை எனவும் இராணுவ அதிகாரிகள் சிலர் என்னிடம் கூறியுள்ளனர்.
நாய் மனித கால்களைக் கடிக்கும், ஆனால் மனிதன் நாயின் காலைக் கடிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |