கைகுலுக்க மறுத்த இந்திய அணி வீரர்கள் முறைப்பாடு செய்த பாகிஸ்தான் நிர்வாகம்
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் முறைப்பாடு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரப்பூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது.
நேற்றைய தினம் துபாயில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் லீக் போட்டி ஒன்றில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன.
கைகுலுக்க மறுத்தனர்
போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்திருந்தது.
எனினும், போட்டியின் பின்னர் இந்திய அணி தலைவர் சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட அணியின் வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு எதிரணி வீரர்களுடன் கைகுலுக்க மறுப்பதானது விளையாட்டின் உயர் தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடியது என பாகிஸ்தான் அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
போட்டி மத்தியஸ்தர் அன்டி பொய்கொப்பிடம் இது தொடர்பில் பாகிஸ்தான் அணியின் முகாமையாளர் நவீன அக்கரம் சீமா அதிகாரப்பூர்வ முறைப்பாடு செய்துள்ளார்.
போட்டியின் நிறைவில் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் நடைபெறும் எல்ல மோதல்கள் காரணமாக இரு நாடுகளுக்கு இடையில் பதற்ற நிலை நீடித்து வருகின்றது. அண்மையில் பஹல்கம் தீவிரவாத தாக்குதல் அதற்கு பதிலடியாக இந்தியாவின் சிந்தூர் தாக்குதல் என இரு தரப்பிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது.
இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட அணியினர் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்து விட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை போட்டியின் ஆரம்பத்தில் இந்திய அணி தலைவருடன் கைகுலுக்க வேண்டாம் என போட்டி மத்தியஸ்தர் பொய்கிரொப்ட் பாகிஸ்தான் அணியின் தலைவர் சல்மான் ஆகாவிடம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், போட்டியின் நிறைவடைந்ததன் பின்னர் கைகுலுக்கக்கூடாது என அறிவித்திருக்கவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



