மகிந்த குடும்பத்திற்கு தொடரும் சோதனை - பெரும் சிக்கலில் ஷிரந்தி
கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்த உள்ளது.
விளையாட்டு அமைச்சுக்காக வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து, ஷிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளது.
இந்த பரிவர்த்தனையால் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சம்பவம் தொடர்பான விசாரணைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் செயலாளர் ஒருவரிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஷிரந்தி ராஜபக்சவின் தலைமையில் செயல்படுத்தப்பட்ட சிரிலிய திட்டம் தொடர்பான விசாரணைகள் முன்னர் கவனத்தை ஈர்த்திருந்தது.
சிரிலிய கணக்கு தொடர்பான 7 முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளது.
போதுமான ஆதாரங்கள்
மேலும் அவற்றில் 6 முறைகேடுகள் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று மூடப்பட்டன.
எனினும் குறித்த பேருந்து பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்த நிலையில், புலனாய்வாளர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்துள்ளனர்.
அதற்கமைய, இது தொடர்பாக வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக லலித் வீரதுங்கவையும் முன்னாள் கூடுதல் செயலாளரையும் வரவழைக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இப்போது உத்தரவுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.



