முல்லைத்தீவில் 71 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு (video)
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாலிநகர் மற்றும் அம்பாள்புரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 71 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் நேற்று (19.12.2022) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் நீண்ட காலமாக காணி அனுமதி பத்திரங்கள் வழங்கப்படாத நிலையில் குறித்த பிரதேச மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களை துரித கதியில் வழங்கும் செயற்றிட்டங்கள் தொடர்ந்து பிரதேச செயலாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பாலிநகர் கிராம அலுவலர் பிரிவு மற்றும் அம்பாள்புரம் கிராம அலுவலர் பிரிவு ஆகிய பிரிவுகளை சேர்ந்த 71 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு
குறித்த நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ரஞ்சனா நவரட்ணம், உதவி பிரதேச செயலாளர் ஜெபமயுரன் காணி அபிவிருத்தி உத்தியோகத்தர் மதன்ராஜ், குடியேற்ற உத்தியோகத்தர்களான பிரசாந்தன், துவாரகன், எஸ்.ஸ்ரீ லக்ஷ்மன், கிராம அலுவலர்களான சுகுணா மதுர நாயகம், பிரசாந்தன் துவாரகன், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






