சர்வகட்சி மாநாட்டை ஹக்கீம், ரிசாட் புறக்கணித்தமை முஸ்லிம்களுக்கு செய்த துரோகம் என சாடல்
''ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுத்தீனும் பகிஷ்கரித்தமையானது வாக்களித்த மக்களுக்குச் செய்த பாரிய துரோகமாகும்'' என சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் சேமான்ய ஏ.எல்.எம்.மீராசாஹிபு தெரிவித்துள்ளார்.
மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை அலங்கரிக்கும் அகில
இலங்கை மக்கள் காங்கிரஸ், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு
பிரதான முஸ்லிம் கட்சிகளும், நடைபெற்று முடிந்த சர்வகட்சி
மாநாட்டில் பங்கு பற்றியிருந்திருக்க வேண்டும். அதனை அவர்கள்
பகிஷ்கரித்திருக்கக்கூடாது.
அவர்கள் அவர்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். கட்சிகளின் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு ஜனாதிபதி களம் அமைத்துக் கொடுத்துள்ளார். நாடு அதள பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கும் இந்நிலையில் ஜனாதிபதி நீட்டும் நேசக்கரத்திற்கு பகிஷ்கரிப்பு செய்வதானது ஏற்றுக் கொள்ளமுடியாது.
ரணில் விக்கிரமசிங்க, இரா.சம்மந்தன் உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகள் கூட அந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
மாறாக ஏன் இரு பிரதான
முஸ்லிம் கட்சிகளும் பகிஷ்கரிக்க வேண்டும்? தனிப்பட்ட ரீதியில்
பகிஷ்கரிப்பதனால் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் கட்சிகளுக்கு ஆதரவு
தெரிவிக்கமாட்டார்கள். எனவே ஜனாதிபதி நேசக்கரம் நீட்டும்போது மாநாட்டில்
முஸ்லிம் கட்சிகள் கலந்து கொள்வது சிறப்பானதாகும் என, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.