வெட்கமாக இல்லையா..! ஈரானியக் கப்பல்கள் விவகாரத்தில் அரசிடம் கடுமையான கேள்விகளை எழுப்பிய ஹக்கீம்
இலங்கைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரானியக் கப்பல்கள் விவகாரத்தைக் குறிப்பிட்டு, அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் (06) இடம்பெற்ற நாடாளுமன்ற உரையின் போது அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த ஈரானியக் கப்பல்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டாம் என அரசாங்கம் நிறுவனங்களுக்குப் பணித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசின் கொள்கை..
ஒருதரப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச அரங்குகளில் இலங்கை முன்னர் எடுத்த நிலைப்பாட்டுடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை எந்த வகையில் நியாயமானது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "ஐக்கிய நாடுகள் சபையில், 'ஒருதரப்பு நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள்' என்று தங்களால் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அவ்வாறு கூறிவிட்டு, தற்போது இங்கு அவர்கள் என்ன செய்கிறார்கள்?
சர்வதேச அளவில் இலங்கை முன்னர் எடுத்த நிலைப்பாட்டிற்கு அமையவே அரசாங்கம் தற்போது செயல்படுகிறதா, நாட்டின் பாரம்பரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து அரசாங்கம் விலகியுள்ளது.
அரசாங்கத்தின் தீர்மானம்
ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக மிகவும் உறுதியாக நின்ற ஜனதா விமுக்தி பெரமுன (JVP) தலைமையிலான அரசாங்கம் இவ்வாறுதான் நடந்துகொள்வதா?

மாநாடுகளில் பெரிய கதைகளைப் பேசிவிட்டு, பின்னர் திரும்பி வந்து அதற்கு நேர்மாறாகச் செயல்பட உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என குறிப்பிட்டுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரானியக் கப்பல்கள் தற்போது இலங்கையின் பிராந்தியக் கடல் எல்லைக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவிடமிருந்து எவ்வித வழிகாட்டல்களும் கிடைக்கவில்லை என்றும், குறித்த கப்பல்களுக்குத் தேவையான பொருட்கள் அல்லது வசதிகளைத் தாம் வழங்கவில்லை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.