கல்கிஸை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் : வெளியான பின்னணி
புதிய இணைப்பு
கல்கிஸையின் (Mount Lavinia) சிறிபுர பகுதியில் இன்று (19) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் கல்கிஸை - படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சவிந்து தரிந்து என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் துபாயில் பதுங்கியுள்ள பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான 'கொஸ் மல்லி' என்பவரின் உதவியாளர் என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டை நடத்த வந்த சந்தேக நபர் 47 வயதுடையவர் என்றும், அவர் படோவிட்ட அசங்கவின் குழுவைச் சேர்ந்தவர் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.
கொஸ் மல்லிக்கும் படோவிட்ட அசங்கவிற்கும் இடையே நீண்டகாலமாக இருந்த தகராறின் விளைவாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான தகராறில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாணத்தின் தெற்குப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கயங்க மாரப்பன தலைமையில் நடைபெற்று வருகின்றன.
முதலாம் இணைப்பு
தெஹிவளை (Dehiwala)- கல்கிசை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் கல்கிஸை - படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சவிந்து தரிந்து என்பவர் என தெரியவந்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
தெஹிவளை (Dehiwala)- கல்கிசை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம்
சம்பவத்தில் காயமடைந்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
இதேவேளை, துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைத்துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |